ஆனால் சிபிஐ,ஐடி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் தான் இருந்தன. அப்போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. இன்று தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று குரல் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி அன்று என்ன நடவடிக்கை எடுத்தார் தெரியுமா?. குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி டி.கே. ராஜேந்திரனை டிஜிபியாக உயர்த்தினார். அதோடு விடவில்லை. அவர் 2017 ஜூன் 30ல் ஓய்வு பெறும் நாளில், அதாவது நள்ளிரவு 12 மணிக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சிறப்பு அதிகாரம் மூலம் 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதுதான் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் குட்கா போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கை. அதைவிட முக்கியமாக தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குட்கா போதைப்பொருள் பரவி இருக்கிறது, இதில் யார்யாருக்கு தொடர்பு, மாதாமாதம் எவ்வளவு வாங்குகிறார்கள்,யார் வந்து கொடுக்கிறார்கள் என்பது வரை அறிக்கை அளித்த ஐபிஎஸ் அதிகாரி அருணாச்சலம், ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு 2018 ஜூலை 11ல் அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்டார். நடவடிக்கை எடுத்தது சாட்சாத் இதே எடப்பாடி பழனிசாமி. ஏடிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரி மண்டபம் முகாமிற்கு மாற்றப்பட்டார் என்றால் அது தண்டனை நடவடிக்கை. அவர் செய்த குற்றம், குட்கா ஊழலை அரசுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதுதான். இப்போது புரிந்து இருக்கும் குட்கா வழக்கை எடப்பாடி பழனிசாமி எப்படி கையாண்டார் என்பது. அவரிடம் இருந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க எப்படி எதிர்பார்க்க முடியும்?. ஆனால் குட்கா வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஒரே ஒரு நடவடிக்கை எடுத்தார். அது 2019 மே 30ம் தேதி டிஎஸ்பி மன்னர்மன்னன் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது ஒன்று தான் குட்கா வழக்கில் அவர் எடுத்த நடவடிக்கை.
ஆனால் இதே எடப்பாடி பழனிசாமிதான் 2024 மார்ச் 1ம் தேதி,’ நாம் வாழ்வது தமிழ்நாடா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை. இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்’ என்று கூறினார். எப்படி இருக்கிறது அவரது பேச்சு?. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்கரை ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு சுதந்திரமாக செயல்பட நல்ல வாய்ப்பு இருந்தது. அவரை முதல்வராக்கிய சசிகலா கூட வெளியே இல்லை. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். டிடிவி.தினகரனும் ஒதுங்கி விட்டார். இப்போது யாராக இருந்தாலும், எந்தவித பாகுபாடும் இன்றி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேட்ட எடப்பாடி பழனிசாமி அப்போது செய்து இருக்க வேண்டியது தானே?. ஏன் செய்யவில்லை. 2018 மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளிக்காமல் 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை காலம் கடத்தியவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி.
இதனால்தான் இந்த வழக்கில் ஏன் இத்தனை தாமதம், ஏன் ஒன்றிய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன.
டெல்லி கலால் கொள்கை வழக்கு, தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு, ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த்சோரன் மீதான சுரங்க நில வழக்கு உள்பட நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளில் சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை காட்டும் வேகத்தை இந்த நாடே கண்டுகொண்டு இருக்கிறது. ஆனால் சமூகத்தை சீரழிக்கிற, இளைஞர்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கிற குட்கா வழக்கை சிபிஐ, ஐடி கையாண்ட விதம் அதிர்ச்சி ரகம். மாதாமாதம் லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் புழங்கிய வழக்கு, ரூ.250 கோடி வரை வரிஏய்ப்பு, சட்டவிரோத பணப்பறிமாற்றம் உள்ளிட்டவை இருந்தும் இன்று வரை அமலாக்கத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2018ல் சிபிஐ விசாரிக்க அனுமதி கொடுத்த பிறகும் கூட குட்கா வழக்கை அமலாக்கத்துறை கண்டுகொள்ளாததன் மர்மம் என்ன? 2016 ஜூலை 8ல் சென்னையில் உள்ள குட்கா குடோன்களில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் மேற்கொண்டு எடுத்த நடவடிக்கை என்ன?. சிபிஐ,ஐடி சோதனை குட்கா தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் வீடுகளில் நடந்த போதும் இந்த வழக்கில் 27 பேர் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட மர்மம் என்ன? மற்ற அதிகாரிகள் பெயர் இடம் பெறாதது ஏன்? குட்கா வழக்கு தொடர்பாக 2016 செப்.2ல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய டிஜிபி அசோக்குமார், செப்.7ல் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்டது ஏன்?.
குட்கா வழக்கில் தொடர்புடைய, குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி டி.கே. ராஜேந்திரன் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டது ஏன்?. மீண்டும் அவருக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்?
n 2016 செப்.22ல் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு திடீரென ஏற்பட்டதா அல்லது குட்கா வழக்கிற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா?. முதல்வர் ெஜயலலிதாவுக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பிய குட்கா வழக்கு தொடர்பான அறிக்கை, சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது எப்்படி? தமிழ்நாடு அரசும், கவர்னரும் அனுமதி கொடுத்த பிறகும் கூட குட்கா வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ, ஐடி இதுவரை கைது செய்யாதது ஏன்? இன்னும் இந்த வழக்கில் ஏராளமான கேள்விகள் எழுந்தபடி உள்ளன. இதற்கு பதில் செப்.9ம் தேதி தெரியும். அன்று தான் குட்கா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 27 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது. அதன்பிறகுதான் குற்றப்பத்திரிகையில் என்னென்ன குற்றச்சாட்டுகள் மாஜி அமைச்சர்கள், மாஜி ஐபிஎஸ் அதிகாரிகள் மீது உள்ளது என்பது தெரிய வரும். இந்த வழக்கில் திமுக தான் புகார்தாரர் என்பதால் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல் அனைத்தும் வெட்டவெளிச்சத்திற்கு வந்துவிடும். சிபிஐ, ஐடி விசாரணையில் என்னென்ன குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, எதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெறும் என்பது தெரிந்து விடும். அதுவரை நாமும் காத்திருப்போம்.