* ஜெயலலிதாவையே ஏமாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள்; 6 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப்பத்திரிகை வழங்குகிறது சிபிஐ
தமிழ்நாடு அரசு மீது குறை சொல்ல முடியாததால், எதிர்க்கட்சிகள் வேறுவழியில்லாமல் அடிக்கடி வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, தமிழ்நாடு போதை பொருள் மாநிலமாக மாறிவிட்டது என்பது தான். ஆனால் தமிழ்நாடு எப்போது போதைப்பொருட்கள் தங்குதடையில்லாமல் கிடைக்கும் மாநிலமாக இருந்தது என்பதை ஆராய்ந்தால் தெரியும், அது அதிமுக ஆட்சி காலம் என்பது.
அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே, அவர் சட்டப்பேரவையில் குட்கா, பான்மாசாலா உள்ளிட்ட பொருட்களை தடை செய்து சட்டம் இயற்றிய பிறகும், அவரது உடல்நலக்குறைவை பயன்படுத்தி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அரசின் உயர் பொறுப்பில் இருந்த காவல் அதிகாரிகள் உதவியுடன் குட்கா உள்ளிட்ட போதைப்பொருளை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய ரகசிய அனுமதி அளித்ததும், அதற்காக மாதாமாதம் குட்கா கும்பலிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றும், அதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாக சிக்கியதும் வரலாற்று உண்மை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி குட்கா வழக்கை விசாரிக்க அனுமதி கொடுக்காமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். அவர் தான் இன்று தமிழ்நாடு போதைப்பொருள் புழங்கும் மாநிலமாக மாறி விட்டது என்று திமுக அரசை குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாடு மீதும், தமிழ் இளைஞர்கள் மீதும் அத்தனை அக்கறை கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்றால், குட்கா வழக்கில் சிக்கிய தனது அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த அமைச்சர் மீதும், கட்சி பிரமுகர்கள் மீதும், தனது அரசின் முக்கிய பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மீதும் அல்லவா முதலில் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.
அதன்பின்னர் குட்கா வழக்கில் சிக்கிய அத்தனை பேர் மீதும் போலீசார் விசாரிக்க அனுமதி கொடுத்து இருக்க வேண்டும். இதில் எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் சேற்றை வாரி இறைக்கிறார். ஆனால் குட்கா வழக்கில் சிக்கிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்ைன உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது திமுக. அதில் உரிய முறையில் வாதாடி சிபிஐ விசாரிக்க அனுமதி பெற்றது திமுக. மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தான் உயர் நீதிமன்றத்தில் குட்கா தொடர்பான மனுவை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வைத்தவர்.
அதன் அடிப்படையில் தான் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, தமிழ்நாடு டிஜிபியாக இருந்த டி.கே. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் உள்பட 27 பேருக்கு சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை வழங்கும் அளவுக்கு வழக்கு நகர்ந்து சென்று இருக்கிறது. குட்கா தொடர்பான புகார் வெளிவரத்தொடங்கியது 2014ம் ஆண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குட்கா விற்ற தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கூட தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்து விட்டனர். இன்று வரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள், கலால்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு கூட இன்றுவரை 6 ஆண்டுகள் கடந்து விட்டது. செப்.9ம் தேதி குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நேரில் ஆஜராக எம்பி,எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அப்போது அவர்களிடம் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை வழங்க உள்ளது. அமைச்சர்களாக இருந்தவர்கள், டிஜிபியாக இருந்தவர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டையே 2011 முதல் போதைப்பொருள் மாநிலமாக மாற்றி வைத்து இருந்தவர்கள், அதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இவர்கள். தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த குட்கா வழக்கு பற்றி தகவல்களை
நாளை முதல் பார்க்கலாம்…
* போதைப்பொருள் ஒழிப்பில் வேகம் காட்டும் அரசு
2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தங்குதடையில்லாமல் கிடைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ உருவாக்கிட வேண்டும் என இலக்கினை நிர்ணயித்தார்.
2022 ஆகஸ்ட் 11 முதல் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 154 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.18.15 கோடி மதிப்புள்ள 45 அசையும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
* தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2022ல் 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5,184 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது.
* 2023ம் ஆண்டு 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 14,770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 23,364 கிலோ கஞ்சா, 0.953 கிலோ ஹெராயின், 39,910 மாத்திரைகள் மற்றும் 1239 கிலோ மற்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
* 2024 ஆண்டில், ஜூன் மாதம் வரை மொத்தம் 4,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,123 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 11,081 கிலோ கஞ்சா, 74,016 மாத்திரைகள் மற்றும் 283.70 கிலோ மற்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* 11.08.2022 முதல் இதுவரை 76 போதைப்பொருள் வழக்குகளில் 8800 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
* 2023 ஆம் ஆண்டில், சுமார் 30 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மொத்தம் 1,10,603 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 2024 ஜூன் வரை, சுமார் 8.20 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்ட சுமார் 23,350 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
* மாநிலம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 391 குழுக்கள் கடந்த நவம்பர் 2023ல் உருவாக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
* கடந்த ஜுலை 2024 வரையில், 19,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 177 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு குற்றவாளிகளிடம் சுமார் ரூ.13.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதுடன் 8,650 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆக.12 அன்று 8,13,775 கிலோ போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
* குட்கா வழக்கில் சிக்கிய 27 பேர் பெயர் விவரம்
1) ஏ.வி.மாதவ ராவ் (குட்கா தொழில் அதிபர்)
2) டி. உமா சங்கர் குப்தா
(குட்கா தொழில் அதிபர்)
3) பி.வி.ஸ்ரீனிவாச ராவ் (குட்கா தொழில் அதிபர்)
4) டாக்டர்.பி.செந்தில் முருகன்
(போதை தடுப்பு பிரிவு அதிகாரி)
5) எஸ்.நவநீத கிருஷ்ண பாண்டியன்
(கலால் வரித்துறை கண்காணிப்பாளர்)
6) இ.சிவக்குமார்
(போதை தடுப்பு பிரிவு அதிகாரி)
7) ஆர். சேஷாத்ரி
(கலால் வரித்துறை கண்காணிப்பாளர்
8) குல்சார் பேகம் (மத்திய வரித்துறை அதிகாரி)
9) அனிஷ் உபாத்யாய்
10) வி.ராமநாதன்
11) ஜோஸ் தாமஸ்
12) பி.செந்தில்வேலவன்
13) பி.வி.ரமணா என்கிற பி.வெங்கடரமணா
(முன்னாள் அதிமுக அமைச்சர்)
14) வி.எஸ்.குறிஞ்சிசெல்வன்
(விற்பனை வரித்துறை அதிகாரி)
15) எஸ்.கணேசன்
(விற்பனை வரித்துறை அதிகாரி)
16) டாக்டர்.சி.விஜயபாஸ்கர்
(முன்னாள் அதிமுக அமைச்சர்)
17) ஏ.சரவணன் (அமைச்சரின் உதவியாளர்)
18) டாக்டர் லட்சுமி நாராயணன்
(போதை தடுப்பு பிரிவு அதிகாரி)
19) பி.முருகன் (அமைச்சரின் உதவியாளர்)
20) எஸ்.ஜார்ஜ் (முன்னாள் போலீஸ் டிஜிபி)
21) டி.கே.ராஜேந்திரன் (முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர்)
22) வி.கார்த்திகேயன்
23) ஆர்.மன்னர்மன்னன்
(முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர்)
24) வி.சம்பத் குமார் (இன்ஸ்பெக்டர்)
25) ஏ.மனோகர்
26) ஏ.பழனி
27) கே.ஆர்.ராஜேந்திரன்