ஆவடி: குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 137 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆவடி அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(31). இவர், வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து அயப்பாக்கம் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, திருமுல்லைவாயல் போலீசார், அங்கு சென்று சோதனை செய்தபோது, ஹான்ஸ், கூலிப், விமல் பான் மசாலா உள்ளிட்ட 137 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(40) என்பவர் செந்தில்குமாருக்கு குட்கா சப்ளை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.