புதுடெல்லி: கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு வந்தது மட்டுமன்றி, தடையை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டவர்களின் மீது அரசு தரப்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் அரசின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்துள்ள வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.