கிருஷ்ணகிரி, நவ.7: பெங்களூருவில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு கடத்திய ₹2 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய எஸ்ஐ மும்தாஜ் மற்றும் போலீசார், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில், குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியமஜித் தெருவை சேர்ந்த சாகுல் அமித் (33), பழனி பழைய ஆயக்குடியை சேர்ந்த முருகன்(27) என்பதும், பெங்களூருவில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் ₹2 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம் மற்றும் அதில் இருந்த ₹2 லட்சத்து 6500 மதிப்பிலான 795 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.