Saturday, April 20, 2024
Home » குரு – சனி இணைவு யோகமா? தோஷமா?

குரு – சனி இணைவு யோகமா? தோஷமா?

by Kalaivani Saravanan
Published: Last Updated on

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

நவக்கிரகங்களில் பிரகஸ்பதியான தேவ குருவான வியாழனும் அசுர கிரகமான சத்ரிய கிரகமான சனியும் இணைவது வித்தியாசமான அமைப்பை தருகின்றது. இதனையே குரு சண்டாள யோகம் எனவும், தர்மகர்மாதிபதி யோகம் எனவும் பிரம்மஹத்தி தோஷம் எனவும் சொல்லப்படுகின்றது. ஹத்தி என்பதற்கு கொலை, மாய்த்தல் என்ற பொருளுண்டு. அனைத்து உயிர்களும் பிரம்மனால் படைக்கப்பட்டது. அந்த உயிர்களை கொலை செய்வதால் ஏற்படுவது பிரம்மஹத்தி தோஷமாகும். இரண்டு மாறுபட்ட எதிரெதிர் கிரகங்கள் இணையும் போதோ, சந்திக்கும் போதோ ஏற்படும் பலன்கள் சிந்திக்க வேண்டியது. இந்த கிரக இணைவிற்கான பலன்களும் வித்தியாசமாக இருக்கும் என்பது அனுபவத்தில்தான் உணர முடியும்.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் குரு என்ற பிரகஸ்பதி நேர்மையானவர். சனி நீதிமான் ஆவார். ஒவ்வொரு கிரகமும் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் ஆற்றலுடன் இருக்கும். இதில், பாஸிடிவ் ஆற்றலுடன் இருந்தால் இந்த இணைவு உள்ள ஜாதகர் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என விட்டுக் கொடுக்கும் குணமுள்ளவர்களாகவும் சில விஷயங்களில் சுயநலமுடன் காணப்படுவர். நெகடிவ் ஆற்றலுடன் இருந்தால் எல்லா விஷயங்களையும் எதிர்மறையாக சிந்திக்கும் குணமுள்ளவர்களாக இருப்பர்.

கடவுள் அவதாரங்களிலும் குரு – சனி இணைவு

புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதாரம் எடுத்த கடவுள்களுக்கும் இந்த குரு – சனி இணைவு உள்ளது. திருமால் மனித அவதாரமாக ஸ்ரீராமபிரானாக பிறப்பெடுத்தார். அவர் பிறப்பெடுத்து சிவ பக்தனான ராவணனை சம்ஹாரம் செய்தார். வாழ்வில் பல துன்பங்களை சந்தித்தார். ராவணனின் சம்ஹாரத்தால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, ராமேஸ்வரத்தில் மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு வழிபாடு செய்து, தனது தோஷத்தை போக்க தவம் செய்தார். கடவுளாக இருந்தாலும் தோஷம் உண்டு.

அதேபோல், முருகப் பெருமான் அசுரனை வதம் செய்து அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய திருச்செந்தூரில் லிங்க பிரதிஷ்டை செய்து தவம் செய்தார் என்பதை புராணம் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தை புரிந்து கொள்ளலாம்.

உலகியல் நிகழ்வுகளில் குரு – சனி சேர்க்கை, பார்வை

* கோட்சாரத்தில் குரு – சனி இணைவு ஏற்படும் போது, பொருளாதார மாற்றங்கள் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் அமையும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

* காடுகளில் உள்ள யானைகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படலாம். யானைகள் யாவும் கானகத்தைவிட்டு நகருக்குள் வலம் வருகின்ற நிகழ்வு மற்றும் மக்கள் யானைகளை காடுகளுக்கு திருப்பி அனுப்புகின்ற நிகழ்வுகள் நடைபெறும்.

* ஆசிரியர்கள் மற்றும் மத குருமார்கள் ஆகியோர் மிகவும் தண்டனைக்கோ அவமதிப்பிற்கோ உள்ளாவார்கள்.

* குழந்தைகள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

* சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமநிலை உணர்வு உண்டாகும்.

பொதுவான குரு – சனி சேர்க்கைக்கான பலன்கள்

* விருச்சிகம், கன்னி, மீனம், மேஷம் லக்னங்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டு. மற்ற லக்னங்களுக்கு சிறப்பான பலன்கள் எதிர்பார்க்க முடியாது.

* சனி – குரு இணைவு அல்லது தொடர்புள்ளவர்களுக்கு வரதட்சணை இல்லாத திருமணம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* சனி – குரு இணைவு உள்ளவர்களுக்கு தனிப்பட்ட ஆவணங்கள் (ஆதார், பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்) வீட்டுப் பத்திரம், ஒப்பந்தப் பத்திரம் போன்றவற்றில் பிழைகளோ திருத்தங்களோ செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும்.

* சனி – குரு இணைவில் இவர்களுக்கு கௌரவ இழுக்கு ஏற்படும் வண்ணம் நிகழ்வுகள் நடக்கும்.

* சனி – குரு இணைவு உள்ளவர்களின் தாய் வழி அல்லது தந்தை வழி உறவில் ஒரு துர்மரணம் நிகழ்ந்திருக்கும்.

* வழக்கறிஞர்களுக்கு சனி – குரு இணைவானது சிறந்த பலனை அளிக்கும்.

* பழகியவர்களே இவர்களுக்கு தீங்கு இழைப்பர் அல்லது உறவினர்களிடம் மிகுந்த மனக்கசப்பு ஏற்படும்.

* தன்னலம், சுயநலம் அற்றவர்களாக இருப்பர். ஏதோ ஒரு காலத்தில் பெரியோர்களையே எதிர்த்து சில காரியங்களை செய்துவிட்டு வருந்துவார்கள்.

* பொருளாதார மேம்பாடு உண்டு. யாரின் மூலமாவது அவமானம் ஏற்பட்டால் அவர்களிடம் காலம் முழுவதும் தொடர்பு கொள்வதையே தவிர்த்து விடுவர்.

* சமுதாயத்தில் நல்ல பெயர்களை எடுத்து வைத்திருப்பர்.

* குழந்தைகளால் துன்பத்தையோ அல்லது மனக்கசப்பையோ வாழ்வில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

குரு – சனி இணைவிற்கான பரிகாரம்

* அனுஷ நட்சத்திரம் அன்று தஞ்சாவூர் – கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூரில் உள்ள மஹாலிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருத்தலத்திற்கு சென்று பிரம்மஹத்தி தோஷப் பரிகாரத்தை கோயிலில் செய்வது சிறந்தது.

* யானைக்கு கரும்பு கட்டை தானமாக வழங்கியும் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

* வியாழக்கிழமை, சனிக்கிழமை சிவனிற்கு அபிஷேக அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்கள் அனைவருக்கும் தானம் செய்தும் பரிகார நிவர்த்தி செய்யலாம்.

You may also like

Leave a Comment

7 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi