Monday, June 23, 2025
Home ஆன்மிகம்ஆலய தரிசனம் குரு பெயர்ச்சி பரிகார தலங்கள்

குரு பெயர்ச்சி பரிகார தலங்கள்

by Porselvi

அயப்பாக்கம்

சென்னை அயப்பாக்கம், வட குருஸ்தலம் என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அங்கே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திதான். அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? பிரமாண்டம்தான். 16 அடி உயர மூர்த்தி இவர். குருபகவானின் இயல்புப்படியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்களின் அனுபவம்.

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரம் – அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். 6 அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புத சிலை இது. இந்தச் சிலையின் கண்கள் அமைப்பு புதிரானது. அந்த விழிகள் எவரையும் காணாதது போலவும் இருக்கும். எல்லோரையும் காண்பது போலவும் இருக்கும்! சிறந்த குரு பரிகாரத் தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் யோக தட்சிணாமூர்த்தி

பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனியில் உள்ளது யோக தட்சிணாமூர்த்தி ஆலயம். குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலை. சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோக நிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை எனப்படும். அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

குச்சனூர் வடகுரு பகவான்

தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள்கிறார். இந்த ராஜயோக தட்சிணாமூர்த்தி சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார். சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவர் இவர். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது பட்டமங்கலம். இக்கோயிலில் 2000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. அருகிலுள்ள அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்ரபாக்கியத் தடைகள் உடனடியாக நீங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

சுருட்டப்பள்ளி

ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். பாற்கடல் கடையும்போது வெளியான ஆலகால விஷத்தை உண்ட ஈசன் சற்றே மயங்கிய நிலையில் உமையின் மடியில் படுத்த வண்ணம் காட்சி தரும் இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாய் அருள்கிறார். இல்லறத்தில் ஏற்படக்கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்தும் தயாபரன் இவர்.

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை இங்கே தரிசிக்கலாம்.

தாராசுரம்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தென்முகக் கடவுள் அருள்கிறார். பிற கோயில்களைப் போலவே இங்கும் வியாழக் கிழமை
களில் பக்தர்களின் கூட்டம் இவர்முன் பணிந்து நிற்கிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற இவரை வணங்குவது பக்தர்களின் வழக்கம்.

வேதபுரி

தேனி&மதுரை வழியில் 1 கி.மீ தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ சென்றால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரஜா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது. பெயருக்கு ஏற்றபடி இவருக்கு பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

தென்குடித்திட்டை

தஞ்சாவூர் – திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது. தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலம் இது. சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனி சந்நதியில் கொலுவீற்றிருக்கிறார் இந்த தட்சிணாமூர்த்தி. அரனின் அருளும் அம்பிகை அருளும் ஒருங்கே இணைத்து அளிக்கும் ஈடில்லா மூர்த்தி இவர்.

தேப்பெருமாநல்லூர்

கும்பகோணத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இங்கு அருளும் குருபகவானின் பெயர் அன்னதான தட்சிணாமூர்த்தி!

திருஇலம்பையங்கோட்டூர்

பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். ரம்பை முதலான தேவகன்னிகைகள் ஈசனை பூஜித்த தலம். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகேசின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார் இவர். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பது போல் அமைந்துள்ளது.

ஆலங்குடி

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சாலையில் 17வது கிலோமீட்டரில் உள்ளது ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும். ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைப்பாடுகளுடன் தரிசிக்கலாம். திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர். ஆறு கால அபிஷேகம் கண்டருளும் தெய்வம்.

குருவித்துறை

குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம், குருவித்துறை. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித் துறைக்கு செல்ல பேருந்துகள் உள்ளன. குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருவையாறு

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடது கரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத்துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் திருக்காட்சியளிக்கிறார். சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார் இவர்.

திருவலிதாயம் (பாடி)

சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார். இந்த திருவடிவம் ‘வ்யாக்யான தட்சிணாமூர்த்தி’ என அழைக்கப்படுகிறது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi