இப்படி ஒரு பழமொழியை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். அது என்ன ஓடியவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு? வேறு ஒன்றும் இல்லை. ஒன்பதாம் இடம் என்பது திரிகோண ஸ்தானம். 9ம் இடத்தை (9ம் பாவம்) பாக்கியஸ்தானம் என்று சொல்வார்கள். அது வலுவாக இருந்தால், ஒருவனுக்கு எது கிடைக்க வேண்டுமோ அதெல்லாம் கிடைக்கும். 9ம் பாவமானது ஆட்சி, உச்சம், திரிகோணம், கேந்திரம், சுப கிரக சேர்க்கை, பார்வை என்ற வகையில் வலிமை பெற்றிருந்தால் வளமையான, வசதியான குடும்பத்தில் பிறந்து சொத்து சுகத்தோடு வாழ்வர். சந்ததி விருத்தி, வம்ச விருத்தி உண்டாகும். வெளிநாட்டு யோகம் கிட்டும். புண்ணிய நதியில் நீராடும் யோகம் கிட்டும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்.
உயர்கல்வி அமையும், தெய்வ அனுக்கிரகம் கிட்டும், ஆலயத் திருப்பணி, சமூகச் சேவை செய்யும் வாய்ப்பு கிட்டும். நல்லோர்கள் யோகிகள், குரு, குல முன்னோர்கள் ஆசி கிட்டும். பட்டம், பதவி, மாலை, மரியாதை யாவும் தேடிவரும். பெண்களுக்கு ஒன்பதாம் பாவம் வலிமை பெற்றால் 7,8ம் இட தோஷம் வலிமை இழந்து நற்பலனை வாரி வழங்கிவிடும்.
பூர்வ புண்ணிய பலனை அனுபவிக்க வைக்கும் ஸ்தானமான பாக்கியஸ்தானம் பலம் பெற்றவர்கள் பாக்கியவான்கள். அதனால் அந்த இடம் வலுவாக இருக்க வேண்டும். பொதுவாகவே சுப இடங்களில் சுபகோள்களும் அசுப இடங்களில் அசுப கோள்களும் இருப்பது ஒரு விதத்தில் நல்லது அந்த வகையில் பூரணமான சுப கோளான குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பது அவருக்கு திரிகோண ஸ்தான பலத்தை அளிக்கும் அதே சமயம் அவருடைய பார்வை லக்னத்தின் மீது விழும் இதைவிட சிறப்பு என்ன இருக்க முடியும்?
குருவின் பார்வை லக்னத்தில் விழுந்தால், லக்ன தோஷமானது பெருமளவு குறையும் ஆகையினால் எதை அனுபவிக்க வேண்டுமோ அதை ஜாதகர் அனுபவிப்பார். பிரச்னைகள் வந்தாலும்கூட அவருக்கு தெய்வ பலத்தினாலும், புத்தி பலத்தினாலும் பிரச்னைகள் குறையும். எதையும் சிந்தித்து நிதானமாக முடிவு எடுக்கக் கூடிய தன்மை இருக்கும்.
9ஆம் இடத்தில் குரு அமைந்தால், அவருடைய நேர் பார்வையானது ஜாதகரின் வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் அமையும். உத்தியோக ஸ்தானம் என்பார்கள். இல்லறத்தில்கூட இந்த மூன்றாம் இடம் வலுவாக இருந்தால்தான், குருவினுடைய அற்புதமான பலனாகிய குழந்தைப் பேறு கிடைக்கும். ஆகையினால் இதை ஒரு விதத்தில் ஆண்மைக்குரிய ஸ்தானம் என்றுகூட சொல்வார்கள்.
அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பது, மனதில் தைரியம் கூடி எதையும் சந்திப்பது, பொதுமக்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது, பிரயாணங்களை செய்வது, தகவல் தொடர்பில் வெற்றிகரமாக இருப்பது, இவைகளெல்லாம் மூன்றாம் இடத்தின் பலன்கள். இந்த பலன்கள் விருத்தி ஆகின்றபொழுது அந்த ஜாதகருக்கு நற்பலன்கள் கூடும்.
மூன்றாவதாக குரு 9ஆம் இடத்தில் இருந்து தன்னுடைய ஒன்பதாம் பார்வையால் 9க்கு 9 ஆம் இடம் ஆகிய 5ம் இடம் அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பார். இது குருவுக்கே உரியசிறப்புப் பார்வை. இந்த ஐந்தாம் இடம் ஜாதகத்தில் விருத்தி அடைந்துவிட்டால், அவர்களுக்கு பூர்வ புண்ணிய பலன்கள் தடையில்லாமல் கிடைக்கும். ஜாதகரின் வாழ்க்கை அமோகமாக இருக்கும். பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிப்பதற்காக தானே இந்த கர்மபூமியில் பிறந்திருக்கின்றோம்.
இப்பொழுது குரு 9ம் இடத்தில் இருந்தால், ஒரு ஜாதகரின் அறவாழ்க்கை (தர்ம வாழ்க்கை) அக வாழ்க்கை, அற்புதமாக அமையும். ஸ்தான பலத்தினாலும் பார்வைப் பலத்தினாலும் ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய இடங்கள் பலம் பெறுகின்றன.
இன்னொரு சிறப்பு உண்டு. லக்கினத்திற்கு 9 ஆம் இடம் வெளிநாட்டின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பண வரவைக் குறிக்கும் இடம். ஏன் எனில் லக்கினத்திற்கு 8 ஆம் வீடு தொலைதூரப் பயணத்தைக் குறிக்கும். பெரும்பாலும் இப்போதைக்கு வெளிநாட்டு வாசத்தைக் குறிக்கும் பாவம் இது. பாவத் பாவக விதிப்படி 9 ஆம் வீடு, 8 ஆம் வீட்டிற்கு 2 ஆம் இடமாக வருவதால் (தன ஸ்தானம்) வெளிநாட்டு வருமானம் பற்றிக் குறிக்கும் இடமாக இருப்பதால், 9 ஆம் வீட்டை வெளிநாட்டு வாசமும் அதனால் வருகின்ற வசதியும் குறிக்கும் இடமாகக்கூறி இருக்கிறார்கள்.
“ஓடுதல்” என்றால் வீட்டைவிட்டு வெறுத்துப்போய் ஓடுதல் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பாதிக்க, வியாபாரம் செய்யப் போவதும் ஓடுதல்தான். உதாரணம் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”.
லக்கினத்திற்கு 2 ஆம் இடம் குடும்ப ஸ்தானம், 4 ஆம் இடம் சுகஸ்தானம். பாவ பாவக விதிப்படி, இந்த 2 ஆம் வீட்டிற்கு 9 ஆம் இடம், 8 ஆம் இடமாக அமைந்து, குடும்பத்தில் இருந்து உங்களை பிரித்து, வேறு இடம் சென்று பிழைக்க வேண்டும் என்பதாலும், சொந்த இடம் என்னும் இருப்பிடத்தை குறிக்கும். 4 ஆம் வீட்டிற்கு எதிராக செயல்படும் 6 ஆம் இடமாக 9 ஆம் வீடு வருவதால் இருப்பிடத்தை விட்டு வெளியே சென்று பொருள் ஈட்டும் நிலையாகவும் 9 ஆம் இடம் அமைகிறது.
ஒரு ஜாதகத்தில் நாம் அதன் கர்ம பலனைத் தெரிந்து கொள்வதற்காக முதலில் பார்ப்பது மூன்று இடங்களைத்தான். அந்த மூன்று இடங்கள் திரிகோண ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகின்ற. லக்னம், (1) பூர்வ புண்ணியம் (5) பாக்கியம்(9). இந்த ஸ்தானங்கள் வலுவில்லாமல் இருந்துவிட்டால் மற்ற ஸ்தானங்கள் வலுவாக இருந்தாலும்கூட அவர்களால் அனுபவிக்க முடியாது. ஆக்கி வைத்த சோற்றை ஆறிப் போனாலும் சாப்பிட முடியாது. அவர்களிடம் இருக்கக் கூடிய வாகனத்தில் அவர்களால் பயணம் செய்ய முடியாது. எல்லாம் இருக்கும். ஆனால் எதையுமே அனுபவிக்க முடியாத வெறுமையும் வெறுப்பும் வாழ்க்கையில் இருக்கும். காரணம், ஒருவனுடைய மனநிலையின் அற்புதத்தை உருவாக்குவது இந்த திரிகோண ஸ்தானங்கள்தான். பார்ப்பதற்கு கோடீஸ்வரனாக இருப்பார். பத்து பேர் சுற்றி இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருப்பார். அதற்குக் காரணம், இந்த ஒன்று, ஐந்து, ஒன்பது என்கிற திரிகோண ஸ்தானங்கள்
வலுவாக இல்லாமல் இருப்பது.
இதில் ஒன்பதாம் இடத்தில் பூரண சுபரான குரு இருக்கின்ற பொழுது, தன்னிச்சையாகவே மற்ற திரிகோண ஸ்தானங்களான ஒன்றாம் இடமும் ஐந்தாம் இடமும் பலம்பெற்று விடுவதால் அவர்கள் வாழ்க்கை எங்கே போனாலும் சிறப்பாக இருக்கும் என்கின்ற அடிப்படையில்தான், “ஓடியவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு” என்கிற பழமொழியை வைத்தார்கள்.