ஸ்ரீபெரும்புதூர்: குண்டுபெரும்பேடு ஊராட்சியில் ரூ.15.25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக வீணாகி வரும் ரேஷன் கடையை, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் குண்டுபெரும்பேடு, மேட்டு காலனி, பள்ள காலனி, ஓட்டங்கரணை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த, பள்ள காலனி பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக ரேஷன் கடை இல்லாமல் இருந்து வந்தது. இதனால், இங்கு புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். அதன்படி, கடந்த 2020-21ம் நிதியாண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15.25 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
இவ்வாறு புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, தற்போது 3 ஆண்டுகளை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதன் காரணமாக, அதே பகுதியில் இயங்கும் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் ரேஷன் பொருட்களை சேமித்து வைத்து, பொதுமக்களுக்கு மாதம்தோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கூட்டுறவுத்துறை சேமிப்பு கிடங்கும் பழைய கட்டிடம் என்பதால் மழைக்காலங்களில் அரிசி பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் வீணாகி போவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, ரூ.15.25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வரும் ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ள காலனி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.