கடலூர்: கடலூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் அருகே ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிருப்புலியூரில் ரயில் நிலையம் உள்ளது. இதன் வழியாக தினந்தோறும் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. அதன் அருகே கம்மியம்பேட்டை ரயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் கம்மியம்பேட்டை ரயில்வே கேட்டுக்கும், அதன் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கும் இடையே உள்ள காலி இடத்தில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தன. இதை நேற்று இரவு பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு கிடந்த 23 தோட்டாக்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த தோட்டாக்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களின் ஈய குண்டுகள் என்பதும், அந்த ஈயக் குண்டுகளை பழைய இரும்பு கடையிலோ அல்லது உருக்கி வேறு பயன்பாட்டிற்கோ பயன்படுத்துவது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் தென்பெண்ணையாற்றில் துப்பாக்கி ஒன்றும், கடந்த மாதம் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே செல்லும் தென்பெண்ணையாற்றில் 174 துப்பாக்கி தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் அருகே துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.