கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வாலிபர்கள் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் சில தினங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்களை அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் பட்டா கத்தி மற்றும் கடப்பாரையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில் பால்ராஜ்(29), பத்மநாபன்(28) ஆகிய 2 பேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்களும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது. இருவரும் சுயநினைவின்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய 2 பேரை தேடி வருகின்றனர். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் இதுபோன்ற பல குற்ற சம்பவங்கள் க்யூ பிராஞ்ச் போலீசாரின் சுயலாபத்திற்காக மறைக்கப்பட்டதாக முகாமில் தங்கியுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே வீடியோ காட்சியின் அடிப்படையில் வெள்ளையன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.