விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி வளாகம் அருகே குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட 52 மாணவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முட்டத்தூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வெளியில் வந்த மாணவர்கள், அந்த வளாகத்தின் அருகே சாலையில் விற்கப்பட்ட குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்படி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதில் 52 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இதேபோன்று குல்பி ஐஸ் சாப்பிட்ட மேலும் 42 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை புகழேந்தி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். இது குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிந்து, தரமற்ற முறையில் வீட்டிலேயே குல்பி ஐஸ் தயாரித்து விற்ற ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(40) என்பவரை கைது செய்தனர்.