கண்ட்லா: ஓமன் வளைகுடாவில் தீப்பற்றி கப்பலில் சிக்கியிருந்த 14 இந்தியர்களை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரேபியக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும், ஆபத்து காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் இந்தியக் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது. சமீபத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடிக் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் நாட்டினரை இந்திய கடற்படையினர் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி பத்திரமாக மீட்டனர்.
சர்வதேச கடல் எல்லையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியக் கடற்படை ஆற்றிவரும் இத்தகைய சேவைகள் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது ஓமன் வளைகுடா பகுதியில் மற்றொரு மீட்புப் பணியை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியாவின் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ‘எம்.டி. யீ ஷெங் 6’ என்ற சரக்குக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பலாவ் நாட்டு கொடியுடன் பயணித்த அந்த கப்பலின் இன்ஜின் அறையில் பற்றிய தீயால், கப்பலின் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. உடனடியாக இந்திய கடற்படைக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த ஐ.என்.எஸ். தபார் போர்க்கப்பல் உடனடியாக விரைந்து சென்று, கப்பலில் சிக்கியிருந்த இந்தியாவைச் சேர்ந்த 14 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டது. மேலும் சரக்கு கப்பலின் பாதி பகுதிக்கு தீ பரவியுள்ள நிலையில், கடற்படை வீரர்கள் மற்றும் கப்பல் ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.