கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன்பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தன்குழி, மைக்கேல் நகர், ஜார்ஜ் நகரைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், ‘ஸ்பான்சர்ஸ்’ எனப்படும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு கீழ் பணியாற்றுகின்றனர். இவர்கள் 7 முதல் 10 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பியவுடன் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. பிற வளைகுடா நாடுகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அதனை விட சிறந்ததாக ஈரான் இருப்பதால் மீனவர்கள், ஈரானை மீன்பிடி தொழிலுக்கு சிறந்த இடமாக கருதுகின்றனர்.
இருப்பினும், சில மீனவர்கள் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். முதலாளிகளால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது, பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுவது, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஊதியமின்மை போன்ற பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தற்போது ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்ததால், ஈரானில் மீன்பிடி தொழில் செய்யும் குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உவரியைச் சேர்ந்த 36 மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர். தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட கலெக்டர் மூலம் கடலோர கிராமங்களில் சிக்கிய மீனவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதல், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை மீனவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. ஒன்றிய அரசு, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க ஒன்றிய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர், மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து, மீனவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மோசமான முதலாளிகளை தவிர்க்க அறிவுறுத்துதல் வழங்கப்படுவதுடன் உள்ளூரில் மீன்பிடி மற்றும் அது தொடர்பான தொழில்களை மேம்படுத்தி, வெளிநாடு செல்லும் தேவையை குறைத்தல் அவசியம் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்திய தூதரகம், ஈரானில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்களுக்கும் இதேபோன்ற முயற்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மீனவர்களின் சரியான இருப்பிடம், எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு நிலையை உடனடியாக கண்டறிய வேண்டும். ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, மீனவர்களுக்கு உடனடி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகம், மீனவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யயும், தூதரகம் மூலம் மீனவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பு குறித்து தகவல் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடரும் அச்சுறுத்தல்கள்
- ஈரானில் மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, எல்லை மீறல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்படுவது ஆகும். 2016ல் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 44 மீனவர்கள் ஈரான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
- 2019ல், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்த படகில் பணியாற்றியபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு ஈரான் கடற்காவல்படையால் கைது செய்யப்பட்டனர்.
- 2021ல்,குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 20 மாதங்கள் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
- 2024ல், ஈரானில் பணியாற்றிய 6 குமரி மீனவர்கள் மோசமான நடத்தை மற்றும் ஊதியமின்மை காரணமாக முதலாளியிடமிருந்து தப்பி, ஈரான் படகில் கேரள கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
தமிழக மீனவர்கள் ஈரானை நாடுவது ஏன்?
- ஈரானின் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகள் மீன்வளம் நிறைந்தவை. இங்கு சுறா, மத்தி, கானாங்கெளுத்தி, மெக்ரல், டுனா மற்றும் பல வகையான மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. ஆழ்கடல் மீன்பிடித்தல் நடைபெறுவதால், உயர் மதிப்பு மீன்கள் மற்றும் இறால், நண்டு கிடைக்கின்றன, இவை உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் நல்ல விலை பெறுகின்றன. இதனால் தமிழக மீனவர்கள், குறிப்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு தொழில் செய்ய ஈர்க்கப்படுகின்றனர்.
- ஈரானில் மீன்பிடி தொழிலில் நவீன படகுகள், ஜிபிஎஸ், மீன் கண்டறியும் சோனார் கருவிகள் மற்றும் தரமான மீன்பிடி வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மீனவர்களுக்கு மீன் பிடிப்பதை எளிதாக்குகிறது . உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது. பெரிய அளவிலான மீன்பிடி கப்பல்கள் மூலம் 7 முதல் 10 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க முடிவதால், ஒரு பயணத்தில் அதிக அளவு மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
- உள்ளூர் மீன்பிடி தொழிலுடன் ஒப்பிடும்போது, ஈரானில் மீன்பிடி தொழிலில் அதிக வருவாய் கிடைக்கிறது. இது மீனவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை அளிக்கிறது. ஈரானில் மீன்பிடி தொழில் பரவலாக உள்ளதால், தமிழக மீனவர்களுக்கு, குறிப்பாக அனுபவமுள்ள கன்னியாகுமரி மீனவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கிறது.
- ஈரானில் பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் சந்தைகளில் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், மீன்பிடி தொழிலுக்கு நிலையான தேவை உள்ளது.
- ஈரானின் கடற்பகுதிகள் மீன்பிடிக்க ஏற்ற காலநிலையை கொண்டுள்ளன. பருவமழை குறுக்கீடு குறைவாக இருப்பதால், ஆண்டு முழுவதும் மீன்பிடி தொழில் தொடர முடிகிறது. இது தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பருவமழை காரணமாக ஏற்படும் தடைகளை விட சிறப்பானது.
- ஈரானில் மீன்பிடி தொழிலில் மோசமான வேலை நிலைமைகள், எல்லை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல் போன்ற சவால்கள் இருந்தாலும், பல்வேறு சிறப்பு அம்சங்கள் காரணமாக கன்னியாகுமரி மீனவர்கள் இங்கு பணியாற்றுவதற்கு தொடர்ந்து ஈர்க்கப்படுகின்றனர்.