காந்திநகர்: ‘தீவிரவாதம் மறைமுக போர் அல்ல. அது பாகிஸ்தானில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டமிட்ட போர் உத்தி. அதற்கேற்ப இந்தியாவின் பதிலடி இருக்கும்’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசினார். குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி தனது பயணத்தின் 2வது நாளான நேற்று காந்திநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: பாகிஸ்தானில் அரசுக்கும், அரசு சாராத அமைப்புகளுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்ட முடியாது. அவர்கள் தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் போரில் ஈடுபட்டுள்ளனர். இதை ஒரு மறைமுக போர் என்று சொல்ல முடியாது.
ஏனெனில் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது. பாகிஸ்தான் தேசிய கொடிகள் அவர்களின் சவப்பெட்டிகளில் போர்த்தப்பட்டன. ராணுவமும் மரியாதை செலுத்தியது. எனவே அவர்கள் விரும்பியே திட்டமிட்டு தீவிரவாதத்தை ஏற்றுள்ளனர். இது அவர்களின் போர் உத்தி என்பதை நிரூபிக்கிறது. அதற்கேற்ப தான் நமது பதிலடியும் இருக்கும்.
உடல் வலுவாக இருந்தாலும், ஒரு முள் தொடர்ந்து வலியை ஏற்படுத்தும். அதுபோல இந்தியாவும் தீவிரவாதம் என்கிற முள்ளை அகற்ற முடிவு செய்து, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது. 1947ல் பிரிவினையின் போது, இந்தியத் தாய் 2 ஆக பிரிக்கப்பட்டாள். அன்றிரவு காஷ்மீர் மீது முதல் தீவிரவாத தாக்குதல் முஜாஹிதீன்களால் தொடங்கப்பட்டது. தீவிரவாதிகளின் உதவியுடன் காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் அபகரித்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் வரை இந்திய ராணுவம் யுத்தத்தை நிறுத்தியிருக்கக் கூடாது என சர்தார் வல்லபாய் படேல் கருதினார். ஆனால் அவரது அறிவுரைக்கு செவிசாய்க்கப்படவில்லை. அப்போதே செய்திருந்தால் இந்த பிரச்னையே இருந்திருக்காது. கடந்த 75 ஆண்டாக தீவிரவாதத்தின் இந்த மரபு தொடர்கிறது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் அதன் மற்றொரு பயங்கரமான வடிவம்.
சிந்து நதியில் நமது பக்கத்தில் அணைகள் கட்டப்பட்டாலும் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. வெறும் 2, 3 சதவீத தண்ணீரை மட்டுமே சேமிக்கும் திறன் உள்ளது. இந்த தண்ணீரை பெரும்பாலும் பெறுவதற்கான உரிமையை இந்திய மக்கள் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.