அகமதாபாத்: குஜராத்தில் 2 மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுக்கள் கரைஒதுங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் துவாரகா மாவட்டத்தின் கோரிஞ்சா கிராமத்திற்கு அருகே கடற்கரையோரத்தில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பாக்கெட்டுக்களை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 50 போதைமருந்து பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களில் கட்ச் கடற்கரையோரத்தில் இருந்தும் 29 போதை மருந்து பாக்கெட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த புதனன்று துவாரகாவில் 21 பாக்கெட்டுக்களும், போலீசாரின் நடவடிக்கையில் 30 பாக்கெட்டுக்களும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்திவருவோர் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தின் பேரில் கடலில் வீசியிருக்கக்கூடும் என்றும் அவை கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.