குஜராத்: குஜராத்தில் பயணிகள் விமான விபத்து குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு பகல் 1.17 மணிக்கு புறப்பட்ட போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை நிலையில் அப்பகுதியில் பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. அகமதாபாத்தில் உள்ள மேகானி நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கியது.
242 பயணிகளுடன் இருந்த விமானத்தில் கரும் புகை வெளியேறும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை தீவிரம் காட்டி வரும் நிலையில், அகமதாபாத் அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் 110 பேர் உயிரிழந்துள்ளனர் . விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1,000 அடி உயரத்தில் சென்றபோது விமானம் திடீரென விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தகவல் வெளியானது.
இதனை அடுத்து அகமதாபாத் விமான விபத்து குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் அப்போது பேசிய அவர் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், இதை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அமித்ஷா, ராம்மோகன் நாயுடு இருவரையும் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள பிரதமர் மோடி உத்தரவிட்டார்.