குஜராத்: குஜராத் நகராட்சித் தேர்தலில் பாஜகவால் நிறுத்தப்பட்ட 82 இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நகராட்சி பகுதிகளில், மாவட்டங்களில், மாநிலம் ஆளுமை கட்சியான பாஜக பிரதிநிதிகளை பெற்றுள்ளது. 2008 நகராட்சி தேர்தலில் பாஜக முதன்முறையாக 4 இஸ்லாமியர்களை போட்டியிட வைத்தது. 2018ல் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் நிறுத்திய 46 இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்தமுறை பல்வேறு நகராட்சி பதவிகளுக்கு 103 இஸ்லாமியர்களை பாஜக களமிறக்கி இருந்தது.
நகராட்சி தேர்தல்களில் வெற்றிபெற்ற ஒட்டுமொத்த இஸ்லாமிய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த முறை 252லிருந்து இந்தமுறை 275ஆக அதிகரித்துள்ளது. இதில் 28 சதவீதம் பேர் பாஜக வேட்பாளர்கள். கடந்த முறை வெற்றி பெற்ற இஸ்லாமிய வேட்பாளர்களில் பாஜகவினரின் சதவீதம் 18. மறுபுறம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 133ல் இருந்து 109ஆகச் சரிந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக இஸ்லாமிய வேட்பாளர்களை போட்டியிட வைப்பது இல்லை. நகராட்சியின் வெற்றியின் காரணமாக 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.