சென்னை: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாள் ஆகும். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில் துவங்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சிபெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
கல்வித் தகுதி 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி. ஆண்களுக்கு வயது உச்சவரம்பு 40. பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சி காலத்தில், கட்டணமில்லா பயிற்சி, உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும். பயிற்சியின் போது ஆன் ஜாப் டிரயினிங் மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.06.2025 ஆகும். தொடர்புக்கு: 044-22501350. மேலும், கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சிநிலையத்தில் செயல்படும் இலவச உதவிமையத்தை நேரடியாக அணுகியும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.