குதிரைக்கு கடிவாளம் போடுவதுபோல், தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 10-க்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை நேற்று முன்தினம் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அவர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா, மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா, சட்டப்பல்கலைக்கழகத் திருத்த மசோதா, அன்னை தெரசா பல்கலைக்கழக திருத்த மசோதா, மீன்வளம், கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்த மசோதா, அண்ணாமலை பல்கலைக்கழக திருத்த மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதா ஆகியவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியதுபோலவே, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அவருக்கே அனுப்பிவைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காகத்தான் இன்று சட்டமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200-வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக – மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். இரண்டாவது – மசோதா சரியில்லை என்றால் நிறுத்திவைக்கலாம். அது, கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம். மூன்றாவது – மசோதா மீதான முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம். மூன்றாவது வாய்ப்புக்கான காரணம் – மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அது குறித்த முடிவை தான் எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசு தலைவர் என்பதால் அதை அவரது பார்வைக்கு அனுப்பி வைக்கலாம்.
இவை தவிர, 2 விதமான மசோதாவை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியாது. ஒன்று – அன்றாட செலவினம் தொடர்பான பண மசோதா. இரண்டாவது – சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றியதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம். அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அப்படித்தான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு, வேறு வழியே இல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
ஒரு மாநில சட்டசபையில் 2-வதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்த ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு நடத்திய மகத்தான ஜனநாயக போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஜனநாயக வழியில் இடைவிடாது போராடினால் சாதிக்க முடியும் என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிரூபித்து காட்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று 10 மசோதாக்களுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடக்கிறது. இது, மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது.