*கணவருக்கு கால் முறிவு; மகன் தப்பினார்
குடியாத்தம் : குடியாத்தம் அருகே மழை காரணமாக அதிகாலை குடிசை இடிந்து விழுந்து தூங்கிய மூதாட்டி பலியானார். மேலும் அவரது கணவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மகன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பிரபல்லி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்(65). இவரது மனைவி ஞானம்மாள்(63). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களது மகன் சதீஷ்(26), கூலித்தொழிலாளி. மேலும் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு விஜயன், ஞானம்மாள் மற்றும் மகன் சதீஷ் ஆகிய 3 பேரும் வழக்கம்போல் மண் சுவரால் கட்டிய அவர்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதேபோல் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி குடியாத்தத்தில் 118 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த கனமழையால் விஜயனின் குடிசை வீட்டின் மண் சுவர் ஈரமாகி வலுவடைந்திருந்துள்ளது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் குடிசை வீடு திடீரென இடிந்து விழுந்தது.
இதில் தூங்கிக்கொண்டிருந்த விஜயன், ஞானம்மாள் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக தப்பிய சதீஷ் கதறி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஞானம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். மேலும் விஜயகுமாருக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையம் மற்றும் தாலுகா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த விஜயனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஞானம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
மேலும் தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிசை வீடு இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.