நீலகிரி: கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் மாலை அதிகாலை நேரங்களில் காட்டு யானை நடமாட்டம் உள்ள நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் பிரதான சாலை கடை தெரு மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானை ஒன்று உலா வந்ததால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.
கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் கோழிப்பாலம் பகுதியில் உள்ள மயானம் வழியாக பிரதான சாலையில் இறங்கிய இந்த காட்டு யானை கோழிப்பாலம் கடைவீதி வழியாக சென்று அங்கிருந்து காப்பி வாரியம் செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே சென்றது.
பிரதான சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்றின் கண்ணாடியை உடைத்துள்ள காட்டு யானை சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் தள்ளிவிட்டு சென்றுள்ளது.
அந்த வழியாக சென்ற யானை அங்குள்ள தனியார் தோட்டம் வழியாக சென்று பின் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இந்த யானையின் நடமாட்டத்தை மனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.