கூடலூர் : கூடலூர், பந்தலூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் குண்டும் குழிகள் அருகில் இறந்தவர் போல படுத்து நூதன போராட்டம் நேற்று நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் சாலைகள் சீரமைக்காமல் உள்ளதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் செப்பனிடப்பட்ட சாலைகள் குறுகிய காலத்தில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். உயிர் காக்கும் அவசர நோயாளி ஊர்திகளை கூட இயக்க முடியாமல் நாள்தோறும் அவதிப்பட்டு வரும் நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்காமல் மாவட்ட நிர்வாகம், தேசிய, மாநில நெடுஞ்சாலை துறைகள் அலட்சியம் செய்வதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் சாலையில் உள்ள பள்ளத்தில் சவப்பெட்டி வைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில் போலீசார் சவப்பெட்டியை வைத்து போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘இறந்தவர்’ போல் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நூதன முறையில் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.