*தீயணைப்பு வீரர்கள் துரிதமாக அகற்றினர்
கூடலூர் : கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கவிப்பாறை, பாரம், 1-ம் பாலம், நியூ ஹோப் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதேபோல தனியார் தோட்டங்கள் வழியாக செல்லும் மின் பாதைகளிலும் மரங்கள் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து உள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பிஎஸ்என்எல் கம்பிவட சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
நேற்று இரவு முதல் மழை சற்று குறைந்த நிலையில் மீண்டும் மதியத்திற்கு மேல் மழையின் வேகம் அதிகரித்து உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி மார்தோ மாநகர் இடையே சாலையின் குறுக்கே மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தது.
இதுகுறித்து அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதேபோல கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட், நடுவட்டம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் விழும் மரங்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவ்வப்போது வெட்டி அகற்றி போக்குவரத்தை துரிதமாக சீரமைத்து வருகின்றனர்.
ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஆற்றில் சிக்கிய கார், பொக்லைன் மற்றும் கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் நேற்று மாலையில் மீட்கப்பட்டது.
இந்த மீட்பு பணியில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் ஈடுபட்டனர். மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆற்றின் வழியே வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியில், யாரும் நடந்தோ அல்லது வாகனங்களை ஓட்டியோ செல்லக்கூடாது என ஓவேலி பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை தட்டி கரையில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள சுமார் 32 பேர் புத்தூர் வயலில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று கூடலூர் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடலூர் ஆர்டிஓ சங்கீதா, தாசில்தார் முத்துமாரி, நகர மன்ற தலைவர் பரிமளா மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர். தொடர்ந்து, வடவயல் பழங்குடியினர் காலனி, பழங்குடியினர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் மற்றும் கோக்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
முகாமில் பழங்குடியினருக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் குறித்து பொது மக்களும் முகாமில் தங்களை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி வரை கூடலூர் 153 மிமீ, தேவாலா 63 மிமீ மழை அளவு பதிவானது.