திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை ஜூலை 8ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதன்படி நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், கடந்த 2ம் தேதி திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் விசாரணையை தொடங்கினார். வழக்கு தொடர்பாக கோயில் ஊழியர்கள் சக்தீஸ்வரன், பெரியசாமி, கார்த்திக் வேலு, பிரவீன், சீனிவாசன், ஆட்டோ டிரைவர் அருண், ஏடிஎஸ்பி சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார், உறவினர்கள் ரம்யா, சாவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. 2 நாட்களாக ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு தொடர்பாக ஆவணங்களும் பெறப்பட்டது.
மேலும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களின் டிவிஆர் பதிவுகள், திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் டிவிஆர் பதிவுகள் மற்றும் வழக்கு தொடர்பான பல்வேறு வீடியோ ஆதாரங்களுக்கான ‘பென் டிரைவ்’ உள்ளிட்டவைகளை நீதிபதியிடம் ஒப்படைத்தனர். நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 3வது நாளாக நேற்று காலை 8.45 மணியளவில் திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் விசாரணையை தொடங்கினார். காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை ஆட்டோ டிரைவர் அய்யனார், திருப்புவனம் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக அஜித்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்களான சதாசிவம் மற்றும் ஏஞ்சல் ஆகியோரிடம், அஜித்குமாரின் உடற்கூராய்வு ஆய்வறிக்கை குறித்தும், உடலில் இருந்த காயங்கள் குறித்தும், அஜித்குமார் உயிரிழப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்தான தகவல்களை விசாரித்தார். இதுவரை மொத்தமாக 17 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. விசாரணை நாளை வரை நடக்கும் என தெரிகிறது.
* ஆட்டோவில் வந்தபோதே அஜித் உயிர் பிரிந்திருந்தது டாக்டர் பேட்டி
அஜித்குமார் மரணம் குறித்து மதுரை மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று நீதிபதி விசாரணை முடிந்த பின்னர், திருப்புவனம் அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு ஜூன் 28ம் தேதி போலீசார் ஆட்டோவில் அஜித்குமாரை தூக்கி வந்தனர். பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா என கேட்டபோது, ‘சிவகங்கை கொண்டு செல்கிறோம்’ என போலீசார் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர். இதனை விசாரணையிலும் தெரிவித்துள்ளேன்’’ என்றார்.
* யார் அந்த அதிகாரி?
காவலாளி மரணம் தொடர்பாக, சிவகங்கை நகரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், அரண்மனை வாசல், கோர்ட் வாசல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த அதிகாரி என்ற வாசகத்துடன் ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* விசாரணைக்கு நிகிதா ஆஜராகவில்லை
நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையின் 3ம் நாளான நேற்று, நிகிதா ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என தகவல்கள் பரவின. ஆனால், நிகிதா நேற்று ஆஜராகவில்லை. அவர் கோவை அல்லது கேரளாவில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* இறப்புக்கு 2 நாள் முன்பே அஜித்துக்கு இதய பாதிப்பு: நயினார் பேட்டி
அஜித்குமார் வீட்டுக்கு நேற்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் வழங்கினார். பின்னர் அளித்த பேட்டியில், ‘‘எப்ஐஆர் போடாமல் அஜித்குமாரை முதலில் ஸ்டேஷனில் வைத்து அடித்துள்ளனர். உடன் பிறந்த சகோதரர் காவல்நிலையம் சென்று கேட்டதற்கு பின் விடுவித்துள்ளனர். அதன் பின்பு சிறப்பு காவல்படையினர் 6 பேர், 2 நாட்கள் வைத்து அஜித்குமாரை அடித்துள்ளனர். 3 இடங்களில் சிகரெட் வைத்து சுட்டுள்ளனர். அடித்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. நடுமண்டை உடைந்துள்ளது. கல்லீரல், இதயம், ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. 23 இடங்களில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே ஏற்கனவே இதயம் பாதித்ததாகவும், 2 நாட்களுக்கு முன்பே உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். போலீசார் தாக்கும் வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை’’ என்றார்.
* பாஜ, ஆர்எஸ்எஸ் பின்னணியில் நிகிதா செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
மடப்புரத்தில் அஜித்குமார் குடும்பத்தினரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக செல்வப்பெருந்தகை மதுரை விமான நிலையத்தில் கூறுகையில், ‘அஜித்குமார் போலீசார் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிகிதா யார், அவரது பின்புலம் என்ன என்பதையெல்லாம் போலீசார் ஆய்வு செய்திருக்க வேண்டும். மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டை நிகிதாவே முன்நின்று நடத்தியதாக செய்திகள், புகைப்படங்கள் வருகிறது. இதனால் அவருக்கு பாஜ, ஆர்எஸ்எஸ் பின்னணி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது’ என்றார்.
* பிரேதப் பரிசோதனை நேர்மையாக நடந்துள்ளது: ஹென்றி திபேன்
அஜித்குமார் குடும்பத்தினரை மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அஜித்குமார் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்காக இருக்கக் கூடாது. அதற்கான தீர்ப்பு, நீண்டகாலம் இருக்க கூடியதாக இருக்க வேண்டும். நீதிபதி விசாரணை முழுமையாக இருக்க, அஜித்குமார் கொலை சம்பவத்தை அறிந்தவர்கள் தைரியமாக சாட்சி சொல்ல வேண்டும். நாங்கள் எப்போதும் சித்ரவதைக்கு எதிராக நிற்போம். அனைத்து துறைகளிலும் நல்லவர்கள் இருந்தால் தான் நீதி சரியான பாதையில் செல்லும்.
அஜித்குமாரை ஒரே இடத்தில் பல முறை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். கிரியாட்டின் அளவு அதிகரித்து சிறுநீரகத்தை பாதித்துள்ளது. வலிப்பு, இதய பாதிப்பால் இறந்ததாக தவறான தகவல் பரவுகிறது. பிரேத பரிசோதனை நேர்மையாக நடந்துள்ளதால் டாக்டர்களை பாராட்டுகிறோம். தற்போது வந்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கை இடைக்காலத்துக்கு தான். இனிமேல் இறுதி அறிக்கை நீதிபதி விசாரணையில் கிடைக்கும். அந்த அறிக்கை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளை வைத்தே விசாரணை நடத்தலாம்’’ என்றார்.