ஊட்டி : ஊட்டியில் காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல ஆயுதப்படையில் இருந்து வாகன சேவை துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர உட்கோட்டம், ஊரக உட்கோட்ட பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் பணியாற்ற கூடிய உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கான குடியிருப்புகள் ஊட்டி புதுமந்து 120 குடியிருப்பு வளாகம், ெஜயில்ஹில், சர்ச்ஹில் பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள காவலர்களின் குழந்தைகள் ஊட்டி நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்ல வசதியாக மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை வாகனம் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அடைப்பு காரணமாக ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட காரணங்களால் இச்சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின், காவலர்கள் தங்களது குழந்தைகளை தாங்களே அழைத்து சென்று வந்தனர். இரவு பணி மற்றும் முக்கிய பணிகளின் போது பள்ளிக்கு அழைத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. காவல்துறை சார்பில் மீண்டும் அவர்களுக்கான வாகன சேவையை துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதன ெதாடர்ந்து காவலர்களின் குழந்தைகளை ஆயுதப்படை வாகனம் மூலம் பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் சேவை துவக்க நிகழ்ச்சி ஊட்டி புதுமந்து காவலர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட எஸ்பி நிஷா தலைமை வகித்து கொடியசைத்து ஆயுதப்படை பள்ளி வாகனத்தை துவக்கி வைத்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,“காவலர்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்ல ஆயுதப்படை மூலம் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுமந்து, ஜெயில்ஹில், சர்ச்ஹில் காவலர் குடியிருப்புகளை சேர்ந்த காவலர்களின் 46 குழந்தைகள் இதன் மூலம் பயனடைவார்கள்.
தினமும் காலை 7.30 மணிக்கு புதுமந்து காவலர் குடியிருப்பில் இருந்து குழந்தைகளை ஏற்றி சென்று பள்ளியில் விடுவார்கள். மாலை 4.30 மணியளவில் மீண்டும் பள்ளியில் இருந்து குடியிருப்பிற்கு அழைத்து சென்று விடப்படுவார்கள். பீரிக்ஸ் பள்ளி, ரெக்ஸ் பள்ளி, ஜோசப் பள்ளி மற்றும் சாந்தி விஜய் பள்ளி என நகரில் உள்ள இப்பள்ளிகளில் பயிலும் காவலர்களின் குழந்தைகள் பயன்பெறுவார்கள்’’ என்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி.,க்கள் சவுந்திரராஜன், தங்கவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.