கோவை: ஒன்றிய நிதி அமைச்சர் மட்டும்தான் சர்வ அதிகாரம் படைத்தவர் அல்ல, ஜிஎஸ்டி வரி சீரமைப்பில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: ஜிஎஸ்டி வரி சீரமைப்பு வந்த பின்புதான், அரசுகளின் வருமானம் அதிகரித்துள்ளது. அதனால்தான் ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்ய முடிகிறது.
வரி சீரமைப்பில் ஏதாவது குறைகள் இருக்கலாம், அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஒன்றிய அரசும், மாநில அரசும் சேர்ந்து வரி சீரமைப்பை செய்துள்ளனர். ஒன்றிய நிதி அமைச்சர் மட்டும்தான் சர்வ அதிகாரம் படைத்தவர் அல்ல. ஒவ்வொரு மாநில நிதியமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்கள்தான்.
மாநில பிரச்னைகளை எடுத்து சொல்ல முழு உரிமை மாநில நிதியமைச்சருக்கு உள்ளது. இது ஒரு கூட்டுப்பொறுப்பு. இரு அரசுகளும் இணைந்து செயல்படும்போது குறைகள் நிவர்த்தி செய்யப்படும். நான் மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்றபோது மின் கட்டணம் உயர்த்தினால் தொழில் வளர்ச்சி ஏற்படாது. எனவே, மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதையேற்று அம்மாநில அரசு மின் கட்டணத்தை குறைத்து முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளது. அதே கோரிக்கையைத்தான் தமிழ்நாடு அரசுக்கும் வைக்கிறேன்.
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைக்காவிட்டாலும் உயர்த்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் நடைபெற்ற லாக்கப் மரணம் வருத்தத்திற்குரியது. காவல்துறை குற்றவாளிகளுக்கு எதிராக தீரத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், காவல் துறையினர் அப்பாவி மக்களுக்கு எதிராக செயல்படுவதை ஆதரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.