புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை மறுவடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இணக்க சுமையை குறைப்பதன் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்குவதை குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இது பெரிதும்மேம்படுத்தி உள்ளது. இந்தியாவின் சந்தையை ஒருங்கிணைக்சுகும் இந்த பயணத்தில் மாநிலங்களை சம கூட்டாளியாக மாற்றுவதன் மூலமாக உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கும்.
அதே நேரத்தில் ஜிஎஸ்டி பொருளாதார வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த இயந்திரமாகவும் செயல்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 17 வரிகளையும், 13 தீர்வைகளையும் ஒன்றிணைத்து, இணக்கத்தை எளிமைப்படுத்தி வரி முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தடையற்ற தேசிய சந்தையை உருவாக்கியுள்ளது. 2024-2025ம் ஆண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூலில் ரூ.22.08லட்சம் கோடியை எட்டியது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.4 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.