‘‘வி ட்டமின் ப கொடுத்து கூட்டத்தை திரட்ட முடியாத நிர்வாகிகளை கடிந்து கொண்ட தாமரை மாநில தலைவர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தாமரை மாநில தலைவரின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் சின்ன மாவட்டத்தில் நடந்தது. இதில் ஏற்கனவே டெல்டா மாவட்டத்தில் மன்னர், மலைக்கோட்டை மாநகரில் நடந்த நடைபயணத்தின் போது எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லாததால் கடும் அப்செட்டான மாநில தலைவர், நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் சென்றார். இந்த 2 மாவட்டங்களில் நடந்த தப்பு சின்ன மாவட்டத்தில் நடந்து விடக்கூடாது. அதிக அளவில் கூட்டம் காட்ட வேண்டும்.
அதுவும் பெண்கள் கூட்டம் தான் அதிகம் இருக்க வேண்டும் என 2 தினங்களுக்கு முன்னதாகவே நிர்வாகிகளுக்கு மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு போடப்பட்டு இருந்ததாம். இதனையடுத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தனித்தனியாக சின்ன மாவட்டம் நகரில் உள்ள தொண்டர்கள், பெண்களை நேரில் சந்தித்து முதல்நாளே ‘விட்டமின் ப’ கொடுத்தும் பெரிய அளவில் எடுபடவில்லை. இதில் டென்சான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வேறுவழியின்றி சின்ன மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ளவர்களை தனிதனித்தனியாக நேரில் சந்தித்து ‘விட்டமின் ப’ கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெண்களுக்கு சேலைகளும் இலவசமாக கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் சின்ன மாவட்டத்தில் நடந்த நடைப்பயணத்தின் போது பெரிய அளவுக்கு கூட்டம் வரவில்லை. ‘விட்டமின் ப’ கொடுத்தும் உங்களால் கூட்டத்தை கூட திரட்ட முடியவில்லை. நீங்கள் எதற்கு பொறுப்பில் இருக்கீங்க என நிர்வாகிகள், பொறுப்பாளர்களை மாநில தலைவர் கடிந்து கொண்டாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோயில் கட்டண விவகாரத்தில் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டது யாராம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘கந்த சஷ்டி திருவிழா என்றாலே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இங்கு பக்தர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட திருச்செந்தூர் கோயில் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்பாடுகளை ஐகோர்ட் நீதிபதி ஒருவரே பாராட்டினார். ஆனால் 2018ல் இலை கட்சியில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை தற்போது சஷ்டி திருவிழாவை முன்னிட்டு உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இலை கட்சி ஆட்சியில் தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது என்பதை கோயில் நிர்வாகமும் உத்தரவை காட்டி வெளியிட்டது. இந்த விஷம பிரசாரத்தில் ஈடுபட்டது யார் என்று பார்த்தால் பாஜ கட்சியின் முன்னாள் நிர்வாகியாம். அவர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலிலும் அரசியலா….. வேறு டாபிக்கே கிடைக்கலையா….சாமி…அந்த முருகனுக்கே வெளிச்சம் என்கிறார்கள் பக்தர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரிப் பக்கம் தாமரை பார்ட்டியில் என்ன விவகாரம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் தொகுதியில் தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏவாக எம்.ஆர்.காந்தி உள்ளார். வயது மூப்பு காரணமாக அடுத்து எம்.ஆர்.காந்தி தேர்தலில் போட்டியிடுவது சந்தேகம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில் காவி கட்சியில் இப்போதே சீட்டுக்கு அடிபோட தொடங்கிவிட்டனர். இதற்காக மண்டல தலைவராக இருக்கும் முத்தானவர் மூத்த தலைவர்களிடம், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு முயற்சி செய்தேன்.
ஆனால், கட்சி நிறுத்திய நிர்வாகியை ஏற்றுக் கொண்டேன். எனவே இம்முறை தனக்கு நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும் என்று மல்லு கட்டுகிறார். இதற்கு மாநில தலைமை சம்மதம் தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறினாலும் , மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரும் சீட்டுக்கு குறிவைத்து முட்டி மோதுகிறார். குமரி பா.ஜனதாவில் பல கோஷ்டிகள் உள்ளதால், இப்போதைக்கு அவசரம் ஒன்றும் இல்லை, அதுக்கு நேரம் வரும் போது பார்த்துக்கலாம் என்று மேலிட தலைவர்கள் சொல்லிவிட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பவர்புல் பெண்மணிக்கு எதிரான குரல்கள் வலுத்து வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் பவர்புல் பெண்மணி, முதலில் அரசுடன் இணக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அரசின் தினசரி நிர்வாக நிர்வாக நடவடிக்கையில் தலையிட்டு சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருகிறார். அரசு அனுப்பிய வழக்கறிஞர்கள் நியமன கோப்பில் கவர்னர் மாற்றி முடிவெடுத்து அறிவிக்கிறார். புல்லட்சாமி அரசின் நிர்வாகத்தில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறார் என பவர்புல் பெண்மணி மீது காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பரபரப்பு புகார் கூறுகிறார்கள். அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர் தமிழிசை புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என சமூகநல அமைப்பினர் போராட்டமும் நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் ஏற்கனவே இருந்த பவர்புல் பெண்மணி, மாநிலத்தில் நீண்ட நாளாக தூர்வாரப்படாத ஏரி, குளங்கள் மற்றும் வாய்கால்களை தூர் வாரி பொதுமக்களிடம் நல்ல பெயரை வாங்கினார். தற்போது உள்ள பவர்புல் பெண்மணி, சி.எஸ்.ஆர் நிதிகளை எதற்கு பயன்படுத்தினார். இதில் பெரிய ஊழல் நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்கட்சிகள் புகார் கூறுகின்றன. இந்த நிதி மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீராதாரங்களை தூர் வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைநோக்கு திட்டங்களை தீட்ட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.