Tuesday, February 27, 2024
Home » தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு: பிப். 28 வரை விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு ஜூன் 9ல் குரூப் 4 தேர்வு: பிப். 28 வரை விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

by Dhanush Kumar

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்காக டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2024க்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணை கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அப்போது 2024ல் குரூப் 4 பதவிக்கான தேர்வு தேதி ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நடத்துவதற்கான தேதியை நேற்று காலை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக வெளியிட்டது.

அதில் குரூப் 4 பதவியில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஏஓ(கிராம நிர்வாக அலுவலர்) 108 இடங்கள், பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் 2,604, என 32 பதவியில் 6,244 பணி இடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மார்ச் 4ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 6ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூன் 9ம் தேதி எழுத்து தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். பகுதி ”அ”வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி ”ஆ” வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் கேட்கப்படும்.

மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி அவில் குறைந்தபட்சம் 40 சதவீதம்(60 மதிப்பெண்கள்) பெற வேண்டும். இந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடைத்தாளின் பகுதி ”ஆ” மதிப்பீடு செய்யப்படும். இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பகுதி அ, ஆ ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெறும். தேர்வறைக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கட்டணத்தில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இரு மாவட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள பல தேர்வு மையங்களில் ஒன்றில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். குரூப் 4 தேர்வு முடிவுகள் தோராயமாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ல் டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. கடந்த 2022ல் குரூப் பதவியில் 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு எழுத 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் சாதனையாக கருதப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு அதே ஆண்டு ஜூலை 24ம் தேதி நடந்தது. திருவிழா போல நடந்த தேர்வை 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதினர். அதிகளவில் தேர்வர்கள் பங்கேற்றதால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளை சரியாக பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 9,870 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்தது. தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு மார்ச் 24ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் வரை காலி பணியிடங்களை நிரப்பலாம். அதனால், தற்போது அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி. மேலும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு பணியில் நேரடியாக சேர்ந்து விடலாம். இதனால், அரசு பணியில் சேர விரும்புவோர் போட்டி போட்டு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விரிவான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தோராயமாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* வனபாதுகாவலர் காவலர் பணிக்கு முதல் முறையாக தேர்வு

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 பணியிடங்களில் புதிதாக வன பாதுகாவலர், வனக் காவலர் பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் இதுவரை வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த பணியிடங்களை நிரப்ப உள்ளது. அந்த வகையில் வன பாதுகாவலர், காவலர் என 1,177 இடங்களை எழுத்து தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சி நிரப்புவது குறிப்பிடத்தக்கது.

* பணியிடங்கள் முழு விவரம்

காலிப் பணியிடங்களின் முழு விவரம்: கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, நேர்முக உதவியாளர் 1, நேர்முக எழுத்தர் 2, தனிச்செயலாளர் 4, இளநிலை செயல் அலுவலர் 41, வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர் 1, பால் அளவையாளர்(கிரேடு 3) 15, ஆய்வக உதவியாளர் 25, வரித்தண்டலர் 66, முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் 49, வனக்காப்பாளர் 171, ஒட்டுநர் உரிமத்துடன் கூடிய வனகக்காப்பாளர் 192, வனக்காவலர் 526, வனக்காவலர் (பழங்குடி) 288, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் 1 இடம்.

You may also like

Leave a Comment

twenty + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi