சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு நடக்கிறது. தேர்வு தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வர்கள் வர வேண்டும். ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. அதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தேர்வுக்கு இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் என போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர்.
சுமார் 2 லட்சம் ேபர் வரை தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குரூப் 1, குரூப் 1ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வின் போது தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்.செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்போர் கண்டறிந்தால், தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு எழுதுவதிலிருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள். தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தேர்வர்களுக்கு கேள்விப் புத்தகம் வழங்கப்படும். ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விப் புத்தக எண்ணை எழுதி கையெழுத்திலிடுவதற்கு முன், அனைத்து கேள்விகளும் எந்த குறைபாடும் இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை தேர்வர்கள் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், அது உடனடியாக அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டு, மாற்றுப் புத்தகம் பெற வேண்டும். தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.