விருதுநகர்: விருதுநகரில் கவுசிகா ஆற்றில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் பெரும் மாசுபட்டு வருகிறது. எனவே, தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கவுசிகா ஆறானது விருதுநகரின் தெற்குப் பகுதியில் செல்கிறது. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் கரை புரண்டு மழை நீரானது வெள்ளமாக செல்லும்.
பல நேரங்களில் கரையை கடந்தும் குடியிருப்பு பகுதிக்குள் கவுசிகா ஆற்றின் தண்ணீர் புகுந்து விடுவதும் உண்டு. இந்த ஆற்றில் தண்ணீர் செல்வதால் நகரின் தெற்கு பகுதியில் உள்ள அய்யனார் நகர், பர்மா காலனி, பிள்ளையார் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பெரிய பள்ளி வாசல் தெரு, சீதக்காதி தெரு, மொன்னி தெரு அஹமது நகர், பாத்திமாநகர், கட்டையாபுரம், ஆத்து மேடு, மாத்திநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைவின்றி கிடைத்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகரின் குப்பை கொட்டும் இடமாக கவுசிகா ஆறு மாறியுள்ளது. குறிப்பாக பாவாலி மற்றும் கூரைக்குண்டு ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் குப்பைகள் பெரும்பாலும் கவுசிகா ஆற்றில் வீசப்படுகிறது. இதேபோல், ஆற்றை ஒட்டியுள்ள நகராட்சி பகுதிகளின் குடியிருப்புகளில் இருந்தும் கவுசிகா ஆற்றின் நீர் நிலைகளில் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதன் மீது உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.
கடந்த காலங்களில் எடை குறைவான பிளாஸ்டிக் கேரி பைகள் தயாரிப்பு பெருமளவு தடுக்கப்பட்டது. இதன் காரணமாக நீர் நிலைகளில் குப்பைகள் வீசப்படுவது சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், மீண்டும் எடை குறைவான பிளாஸ்டிக் கேரி பைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக பாத்திமாநகர் ஆத்துப்பாலம், சாத்தூர் சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, முத்துராமலிங்கம் நகர், பர்மா காலனி, அய்யனார் நகர், போலீஸ் பாலம் ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளில் மக்காத குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
இவற்றை விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போவதோடு, நீர் நிலைகள் பெரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், கவுசிகா ஆற்றில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.