ஈரோடு: நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்கிறார். இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் 65 ஆண்டுகால கனவு நிறைவேறுகிறது.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்நாட்டில் அத்திக்கடவு என்ற இடத்தில் பில்லூர் அணை வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து 75 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. மொத்தம் 225 கி.மீ. தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரும் சிற்றாறுகளும் கலக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின்போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள அவிநாசி, அன்னூர், காரமடை, திருப்பூர், சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டுதல் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக 1957ம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர் பல்வேறு காலகட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் கைகூடவில்லை. 1972ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் கலைஞரால் கொள்கை ரீதியாக இத்திட்டம் ஏற்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.
1990ம் ஆண்டு முதல்வர் கலைஞர் மீண்டும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த காலத்தை போலவே மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இப்படி ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதும், பின்னர் ஏற்படும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடுவதும் என இருந்து வந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் விவசாயிகள், பொதுமக்கள் ஆங்காங்கே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்பிறகு 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அதிமுக அரசு அவிநாசி-அத்திக்கடவு திட்டம் 3 ஆண்டுகளுக்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் அறிவித்தது. ஆனால் வழக்கம்போல அதிமுக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் 3 மாவட்ட விவசாயிகள் போராட்டம், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அழுத்தம் காரணமாக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்ட பணிகளில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் திட்டத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக இத்திட்டத்திற்காக பிரதான நீரேற்று நிலையங்களுக்குகூட அதிமுக அரசு நிலத்தை கையகப்படுத்தாமல் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் முதலாவது நீரேற்று நிலையத்திற்கான நிலமே கையகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் நீரேற்று நிலையங்கள் முழுமையாக அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தியபோதுதான் ஆங்காங்கே குழாய் வால்வுகள் பழுதடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அதை எல்லாம் சரி செய்யப்பட்டு 1,045 குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் செல்லும் அளவுக்கு தயார்படுத்தப்பட்டன.
கடந்தாண்டு ஈரோடு வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டப்பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது கலெக்டர்களிடம் கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்தி வந்தார். தற்போது மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து இத்திட்டத்திற்கு தேவையான தண்ணீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக காவிரி ஆற்றில் வெளியேறி வருவதால் உபரி நீரை அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நீரேற்றம் செய்ய தற்போது சரியான காலகட்டம் என நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
கடந்த 65 ஆண்டுகளில் திட்டத்தை செயல்படுத்த முன்வராமல் கிடப்பில் போட்டது, சட்டமன்றத்தில் அறிவித்தும் நிதி ஒதுக்கீடு செய்யாதது, பணிகளில் குளறுபடிகள், கொரோனா தொற்று பரவலால் பணிகள் பாதிப்பு, மழை பாதிப்பு, குழாய்கள் பழுது, கோர்ட்டில் வழக்கு, திட்டம் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பதை தெரிந்தும் அரசியல் ஆதாயம் தேட முயன்றது என பல தடைகளையும் தாண்டி இத்திட்டம் நாளை (17ம் தேதி) நனவாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். திட்ட தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற உள்ளது. அவிநாசி-அத்திக்கடவு திட்டமானது தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களில் முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது.
திட்டம் செயல்படுவது எப்படி?
அவிநாசி-அத்திக்கடவு திட்டமானது பவானி ஆற்றின் குறுக்கே பவானி காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி. உபரிநீரை பம்பிங் செய்து நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக பவானி, நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 958 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
1.5 டிஎம்சி தண்ணீர் நீரேற்றம்
பவானி ஆற்றில் மழைக்காலங்களில் உபரி நீர் செல்லக்கூடிய நாட்களாக கருதப்படும் 70 நாட்களில் வினாடிக்கு 250 கன அடி வீதம் சுமார் 1.5 டிஎம்சி நீரேற்றம் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ் பகுதியில் திருப்பணை, தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய், பிரதான நீரேற்று நிலையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. நீரேற்று நிலையத்தில் 33 கிலோ வால்ட் திறனில் இயங்கக்கூடிய 8 டர்பைன் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் மோட்டரும் 1.15 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி வினாடிக்கு 42 கன அடி தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் திறன் கொண்டவை ஆகும்.
1045 குளங்களுக்கு தண்ணீர்
அமைச்சர் சு.முத்துசாமி கூறுகையில், ‘அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம். ஆங்காங்கே சிறு பிரச்சனைகள் உள்ளன. அதெல்லாம் சரி செய்யப்பட்டு முழுமையாக அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நீதிமன்ற உத்தரவின்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன் ஒன்று முதல் மூன்று வரை கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்பத்தப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி வந்த பின்புதான் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணி நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்றார்.
ரூ.134 கோடியில் தொடங்கி
ரூ.1,914 கோடியில் நிறைவு
ரூ.134 கோடியில் தொடங்கி ரூ.1914 கோடியில் நிறைவு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்ற 1998ம் ஆண்டு ரூ.134 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பின்னர் 2000ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டபோது ரூ.380 கோடியாக உயர்ந்தது. திட்டம் அடிக்கல் நாட்டியபோது ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் ரூ.1756.88 கோடியை கடந்து இறுதியாக ரூ.1,916 கோடியில் திட்டம் நிறைவடைந்துள்ளது.
காமராஜரிடம் வைத்த கோரிக்கை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றம்
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தக்கோரி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர் பக்தவச்சலம், கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என தொடர்ந்து வந்த இந்த திட்டமானது தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்
அவிநாசி-அத்திக்கடவு திட்டமானது நேரடி நீர்பாசன திட்டம் அல்ல. மாறாக முற்றிலும் நிலத்தடி நீரேற்று திட்டமாகும். இத்திட்டம் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.