கார்த்திகைப் பட்டமும் நிலக்கடலை சாகுபடியும் என்ற தலைப்பில் கார்த்திகைப் பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் முறை குறித்து கடந்த வார இதழில் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சு.வெங்கடாசலம் எழுதி இருந்தார். அதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களை இந்த இதழில் பகிர்ந்துகொள்கிறார். 60 செ.மீ அகலத்திற்கு படுக்கை அமைத்து, அதன் இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ அகல அளவுக்கு வாய்க்கால் அமைத்து, படுக்கைகளில் விதைகளை விதைப்பதே சிறந்த முறை ஆகும். நிலக்கடலையில் காய்ப்பு அதிகரிக்க அகன்ற படுக்கைகள் மற்றும் வாய்க்கால் அமைப்பது அவசியம். இது காய்ப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும். சிறிய மாற்றங்கள் செய்து பாலித்தீன் கொண்டு ஈரத்தைத் தக்க வைக்கும் வகையிலும் படுக்கைகள் அமைக்கலாம். 4.5 மீ X 6 மீ என்ற அளவுகளில் 5 படுக்கைகள் அமைக்க வேண்டும். படுக்கை தயாரித்து உரம் அளித்த பின்னர் மண்ணின் மேற்பரப்பில் கருப்பு பாலித்தீன் தாளை பரப்ப வேண்டும். எக்டருக்கு 50 கி.கி பாலீத்தீன் தேவைப்படும். 30 X 10 செ.மீ அளவிற்கு துளையிட்ட பின் தாளை பரப்பலாம்.
விதை அளவு
சாதாரண நிலக்கடலை சாகுபடிக்கு எந்த அளவில் விதைகளைப் பயன்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு இந்த முறையில் விதைகளைப் பயன்படுத்தலாம். நீர்ப்பாசனத்தை முறையாக கையாள வேண்டும். அதாவது பூப்பதற்கு முன்பு (1-25 நாட்கள்), பூக்கும் பருவம் (26-60 நாட்கள்), முதிர்ச்சிப் பருவம் (61-105 நாட்கள்) ஆகிய பருவங்களில் நீர்ப்பாசனம் மிக முக்கியம். இந்த சமயங்களில் மண்ணின் ஈரப்பதம் மிக மிக அவசியம். தற்போது தண்ணீரை சிக்கனப்படுத்தி குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் செய்ய தெளிப்புநீர் பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனத்தை மேற்கொள்ளலாம். இதன்மூலம் 30 சதவீத நீர்த் தேவையைக் குறைக்கலாம்.
ஜிப்சம் இடுதல்
ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45வது நாளில் இறைவை பயிருக்கும், 40-75வது நாளில் மானாவாரிப் பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து ஜிப்சம் இட வேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும்.
ஊட்டச்சத்துக் கலவை தெளிப்பு
பெரிய பருப்புகள் கொண்ட ரகங்களில் காய்களின் வளர்ச்சி குறைபாட்டுடன் இருக்கும். இது ஒரு பெரிய இடர்பாடாக இருக்கும். இதைத் தவிர்த்து நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளைப் பெறுவதற்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் கலவையை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) 0.5 கிலோ 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் தயார் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் மருந்து 350 மில்லியை இதில் சேர்த்து, விதைத்த 25ம் மற்றும் 35ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவது ஆகியவை முதிர்ச்சியைக் குறிக்கும் சமிக்ஞை ஆகும். கால அளவைப் பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். அறுவடைக்கு முன் நீர்பாய்ச்ச வேண்டும். காய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக்கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ளபோது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். செடிகளில் இருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானை உபயோகப்படுத்தலாம். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடித்தால் நிலக்கடலைப் பயிர்களில் அதிக மகசூல் பெறலாம்.மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம். உழவர் செயலியின் மூலமும் இதுகுறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.