விவசாயம் ஒரு தேசத்தின் உயிர்நாடி. ஆனால், நவீன யுகத்தில் விவசாயம் லாபகரமான தொழிலா என்ற ஐயம் பலருக்கும் உண்டு. காலநிலை மாற்றங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள், அதிகரிக்கும் உற்பத்தி செலவுகள் என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இருப்பினும், நெல்லை மாவட்டம் பருத்திப்பாடு அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமாரவேல், தனது அயராத உழைப்பாலும், சரியான திட்டமிடலாலும் நிலக்கடலை விவசாயத்தில் மூன்று மாதங்களில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். இது விவசாயத்தால் இன்னும் செழிப்பாக இருக்க முடியும் என்பதற்கான ஒரு நம்பிக்கை ஒளியைக் கொடுத்துள்ளது.நாற்பது வயதான குமாரவேல், விவசாயத்தை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல், ஒரு கலையாகவும், வருமானம் ஈட்டும் வழியாகவும் மாற்றி இருக்கிறார். அவருக்கு நான்கு ஏக்கர் பரப்பளவில் நெல் வயலும், ஒன்றரை ஏக்கரில் வாழைத் தோட்டமும் உள்ளன. கூடுதலாக, இரண்டு ஏக்கர் நிலத்தில் அவர் நிலக்கடலை சாகுபடியும் செய்து வருகிறார். இவர் கடந்த ஆடிப் பட்டத்தின்போது நிலக்கடலை சாகுபடியின் மூலம் குறுகிய காலத்தில் கணிசமான வருமானம் ஈட்டியிருப்பது பலரையும் வியக்க வைத்தது.
“எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் விதைதான் அடிப்படை. அதை நாம் தரமானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். நான் நிலக் கடலை சாகுபடி செய்வதற்கு முதலில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை அணுகி தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் எனக்கு ஒரு கிலோ ரூ.150 என்ற விலையில் ‘தரணி’ ரக நிலக் கடலை விதைகளை வாங்குமாறு ஆலோசனை வழங்கினர். மொத்தம் 120 கிலோ விதைகளை நான் வாங்கினேன். குறுகிய காலத்தில் அதிக மகசூல் என்பது இந்த ரகத்தின் தனிச்சிறப்பு. நான் இந்த ஆண்டு தை மாதத்தில் நிலக்கடலைகளை விதைத்தேன். பொதுவாக இந்தப் பயிர் 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த ரகத்தை பயிரிட்டேன். அப்போது எனக்கு முக்கால் டன் நிலக்கடலை கிடைத்தது. இதன் மூலம் நான் ரூ.80 ஆயிரம் வருமானம் பெற்றேன். காலநிலை கைக்கொடுத்திருந்தால் கடந்த முறை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டி இருக்க முடியும். இந்த முறை இரண்டு ஏக்கரில் பயிரிட்டுள்ளதால், ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒரு ஏக்கரில் களை எடுப்பது, உரமிடுவது உள்ளிட்ட பணிகளுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். எனக்கு சொந்தமாக டிராக்டர் இருக்கிறது. நானே நிலக்கடலையை விதைக்கும் பணியில் ஈடுபடுவேன். இதுபோன்ற காரணங்களால் எனக்கு செலவு வெகுவாக குறைகிறது. இரண்டு ஏக்கர் நிலம் என்பதால் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலவாகும். ஆனால், அறுவடையின்போது கிடைக்கும் வருமானம் இந்த செலவை விட பல மடங்கு அதிகம். வேளாண்மைத்துறை சார்பில் ஒரு கிலோ நிலக்கடலையை சுமார் 120 ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் ஒரு டன் மகசூல் கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளேன். அப்படியானால் இரண்டு ஏக்கரில் இருந்து இரண்டு டன் நிலக்கடலை கிடைக்கும். சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் மகசூல் வர வாய்ப்புள்ளது. இரண்டு டன் நிலக்கடலையை விற்றால் எனக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தில் நான் செய்த 30 ஆயிரம் ரூபாய் செலவை கழித்தாலும் கூட எனக்கு நிகர லாபமாக இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும்.
நிலக்கடலை சாகுபடியில் அதிகளவில் லாபம் பார்க்க முடியாது என்பதே பல விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. அது முற்றிலும் தவறான கருத்து. நிச்சயமாக நிலக்கடலை விவசாயம் லாபகரமான விவசாயம்தான். ஆனால், அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நிலத்தைத் தயார் செய்வது முதல் அறுவடை வரை ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும். வேளாண்மைத்துறை அதிகாரிகளே அடிக்கடி எனது நிலத்திற்கு வந்து நிலக்கடலை பயிரின் வளர்ச்சியைப் பார்வையிடுகிறார்கள். தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள். நான் விளைவிக்கும் இந்த ‘பரணி’ ரக நிலக்கடலைகள் அனைத்தும் நாங்குநேரியில் உள்ள அரசு விதைப்பண்ணைக்கு செல்கின்றன. அங்கு அவர்கள் தரத்தைப் பரிசோதித்து கொள்முதல் செய்கிறார்கள். கொள்முதல் செய்த 10 நாட்களுக்குள் அதற்கான பில் நமக்கு வந்துவிடும். நமது உழைப்புக்கான ஊதியமும் விரைவாக கிடைத்து விடுவதால் பணப்புழக்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை’’ என மகிழ்ச்சி பொங்க கூறினார்.
தொடர்புக்கு:
குமாரவேல்: 80565 92868.
எள் பயிரில் பூச்சி மேலாண்மை!
சித்திரைப் பட்டத்திற்கு சில பயிர்கள் உள்ளன. அதில் முக்கியமானது எள் பயிர். தற்போது பல விவசாயிகள் எள் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், எள்ளைத் தாக்கும் சில பூச்சிகள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் அறிந்துகொள்வோம். எள் பயிரைத் தாக்கும் இரண்டு முக்கிய பூச்சிகள் தண்டுப்பிணைப்பான் மற்றும் காய்ப்பிணைப்பான். இவை எள் பயிரின் தண்டுப் பகுதியினை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தும். வளர்ந்த பயிர்களில் இளம் காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதப்படுத்தி மகசூலில் இழப்பை ஏற்படுத்தும். இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, விதைத்த 25, 35 மற்றும் 50 நாட்களுக்குப் பிறகு பாசோலோன் 400 மில்லி அல்லது மானோகுரோட்டபாஸ் 400 மில்லி அல்லது கார்பரில் 50 சதவீதத்தூள் 400 கிராம் இதில் ஏதாவது ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு ஸ்பிரே செய்ய வேண்டும். எள் பயிரில் காவடிப்புழு என்ற புழுவும் சேதத்தை விளைவிக்கும். சுமார் 60 மி.மீ நீளம் கொண்ட இந்தப் புழுக்கள் இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும் வல்லமை கொண்டவை. இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 750 மில்லி மாலத்தியான் அல்லது 400 மில்லி பென்தியான் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.