Saturday, April 13, 2024
Home » நிலக்கடலை, எள் விலை முன்னறிவிப்பு

நிலக்கடலை, எள் விலை முன்னறிவிப்பு

by Porselvi

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவுப்பு திட்டமானது, நிலக்கடலைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “நிலக்கடலையானது நாட்டின் மொத்த எண்ணெய் வித்துக்கள் பரப்பளவில் முதலிடத்திலும், உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது. உலகளவில் நிலக்கடலை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியா, நைஜீரியா, அமெரிக்கா, சூடான் மற்றும் செனிகல் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் குறுவை மற்றும் ரபி பருவத்தில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பயிர் முன்னறிவிப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் மதிப்பீட்டின்படி, 2022- 23ம் ஆண்டில் காரீப் பருவத்தில் 45.53 லட்சம் ஹெக்டேராக இருந்த பயிர் பரப்பு 2023-24-ல் 43.91 லட்சம் ஹெக்டேராகவும், ரபீ பருவத்தில் 2022-23ல் 3.74 லட்சம் ஹெக்டேரில் இருந்து 2.83 லட்சம் எக்டராகவும் 2023-24ல் குறைந்து வருகிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) குஜராத் மாநிலம் நிலக்கடலை உற்பத்தியில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. நிலக்கடலை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் சுமார் 3.72 லட்சம் எக்டர் பரப்பளவில் 10.47 லட்சம் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை அதிகளவில் பயரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, தற்போது சந்தைக்கு நிலக்கடலையின் வரத்து தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து வருகிறது. அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழைப்பொழிவு காரணமாக நிலக்கடலையின் பரப்பளவு மற்றும் சந்தை வரத்து குறைந்து காணப்படுகிறது. விலை முன்னறிவிப்புத் திட்டக் குழு, கடந்த 16 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அறுவடையின்போது தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு ரூ.80 முதல் 85 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தை வரத்து மற்றும் பருவமழையைப் பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம்’’ என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதேபோல எள்ளுக்கான விலை முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில், “ உலகில் சூடானுக்கு அடுத்தபடியாக எள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் குறுவை மற்றும் ரபி பருவத்தில் எள் பயிரிடப்படுகிறது. பயிர் முன்னறிவிப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் மதிப்பீட்டின்படி, 2022- 23ம் ஆண்டில் காரீப் பருவத்தில் 13.44 லட்சம் எக்டராக இருந்த பயிர் பரப்பு 2023-24-ல் 12.43 லட்சம் எக்டராகவும், ரபீபருவத்தில் 2022-23ல் 0.27 லட்சம் எக்டரில் இருந்து 0.16 லட்சம் எக்டராகவும் குறைந்து வருகிறது. மேற்கு வங்காளம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை எள் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாக உள்ளன. தமிழகத்தில், 2021-22ல், 4.7 லட்சம் எக்டர் பரப்பளவில் எள் உற்பத்தி 2.79 லட்சம் டன்னாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எள் உற்பத்தித்திறன் எக்டருக்கு 589 கிலோ ஆகும். விழுப்புரம், தஞ்சாவூர், ஈரோடு, கரூர், கடலூர், சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகியவை எள் பரப்பளவில் 66 சதவீதமும், உற்பத்தியில் 65 சதவீதமும் பங்களிக்கின்றன. தமிழகத்தில் ஏப்ரல் முதல் மே வரையிலும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலும் எள் விதைக்கப்படுகிறது. மானாவாரியாக கோடை பயிராக குறைந்த பரப்பளவில் எள் பயிரிடப்படுகிறது. அதிக வறட்சியை தாங்கும் தன்மை மற்றும் விதைகளில் உள்ள அதிக எண்ணெய் உள்ளடக்கம் ஆகியவற்றால் எள் பரவலாக விரும்பப்படுகிறது. சிவப்பு நிறத்தில் இருந்து பழுப்பு நிறத்தில் இருக்கும் வேறு சில ரகங்களும் பயிரிடப்படுகின்றன.

ரபி பயிர் சாகுபடி பரப்பு குறைக்கப்பட்டது. அதிக பருவ மழைப்பொழிவு காரணமாக வரத்து பற்றாக்குறை மற்றும் பயிர் தேவை அதிகரிப்பு ஆகியவை வரும் மாதங்களில் எள்ளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விலை முன்னறிவிப்புத் திட்டக் குழு, கடந்த 15 ஆண்டுகளாக சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அறுவடையின்போது ஏப்ரலில் தரமான எள்ளின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.170 முதல் 175 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்புக்கான முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். பருவமழை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வரத்து அடிப்படையில் விலையில் மாற்றம் இருக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு:
0422-2431405, 2450812, 6611278
ஆகிய எண்களுக்கு
தொடர்பு கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

four + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi