சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் நேற்று நடந்த காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், தெற்கு மண்டலத்தில் பணியாற்றும் 268 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளிடம் போலீஸ் கமிஷனர் அருண் நேரடியாக மனுக்கள் பெற்றார்.
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான ‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்’ நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. முதற்கட்டமாக சென்னை பெருநகர ெதற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு நடந்தது. இந்த முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு, 268 காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பெரும்பாலானோர் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதிய குறைபாடு களைதல் போன்ற கோரிக்கைகளை கமிஷனரிடம் முன்வைத்தனர். காவலர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இந்த முகாமில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், இணை கமிஷனர் கயல்விழி மற்றும் துணை கமிஷனர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.