*துறை அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காணப்படும்
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் செலுத்தி விட்டு சென்றனர்.
இந்த கோரிக்கை மனுக்கள் வருவாய்த்துறையினர் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆட்சியர் தலைமையிலான பிறதுறை அதிகாரிகள் நேரடியாக பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பார்கள். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் அதிகளவில் மனு கொடுக்க வருவார்கள்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருவதால் நேற்றைய தினம் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே நேற்று வழக்கம்போல் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்ததை அறிந்து நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 7 வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதனால் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனு அளித்து அதற்கான தீர்வை ஏற்படுத்தி கொள்ளுமாறும், அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாது எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை செலுத்தினர். பெட்டியில் செலுத்தப்படும் கோரிக்கை மனுக்கள் அன்று மாலை வருவாய்த்துறையினர் எடுத்து சென்று புகார் மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.