ஜெருசலேம்: நிவாரண பொருட்களுடன் காசாவுக்கு படகில் செல்ல முயன்ற சுற்றுச்சுழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 12 சர்வதேச ஆர்வலர்களை இஸ்ரேல் ராணுவம் சர்வதேச கடல் எல்லையில் தடுத்து நிறுத்தி சிறைபிடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் போராளிகள் விடுவிக்க நெருக்கடி கொடுப்பதற்காக, காசாவிற்குள் நுழையும் நிவாரண பொருட்களை இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது.
இந்த சூழலில் காசாவில் குழந்தைகளுக்கு தேவையான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 12 சர்வதேச ஆர்வலர்கள் மேட்லீன் படகில் கடந்த 1ம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவான சிசிலியில் இருந்து புறப்பட்டனர். இந்த படகு காசாவில் இருந்து 200 கிமீ தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் நேற்று பயணித்த போது, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் அப்படகில் இருந்த துன்பர்க் உள்ளிட்டோரை சிறைபிடித்து இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றனர். படகில் இருந்த சமூக ஆர்வலர்கள் அனைவரும் இஸ்ரேல் படைகளால் கடத்தப்பட்டதாக பயண ஏற்பாட்டை செய்த ப்ரீடம் புளோடிலா கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.