விழுப்புரம்: சந்திரயான்-3 விண்கலம் நேற்று மாலை 6.03 மணி அளவில் நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. அதனை இந்திய விண்வெளி துறையினர் மற்றும் இந்திய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் நகரத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் விழுப்புரத்தில் குடியிருந்து வருகிறார். நேற்று மாலை சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இறங்கிய காட்சியை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அதனைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.
இத்திட்டத்தில் தமிழர் ஒருவர் திட்ட இயக்குனராக செயல்பட்டு சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரமுத்துவேலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள அவரது தந்தை பழனிவேலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இன்று காலை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பழங்கள் கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வரும்போது பழனிவேலை நேரில் சந்திக்க இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பழனி அவரிடம் கூறினார்.