தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம்தான் தாதநாயக்கம்பட்டி. பெரிதளவில் விவசாயம் இல்லையென்றாலும் மலர் சாகுபடி காய்கறி சாகுபடியில் முதன்மையாக இருக்கும் கிராமம். சாமந்தி, மல்லி போன்ற மலர்கள் அதைத்தொடர்ந்து தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறிகளும் பயிரிட்டு வருகிறார்கள். செம்மண் கலந்த மணல் என்பதால் விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் கொண்ட பகுதி. அந்த கிராமத்தில்தான் இருக்கிறது தர்மனின் இயற்கை முறை விவசாயத் தோட்டம். பலரும் மலர் சாகுபடியை செய்துவந்தபோது தர்மன் மட்டும் அவருக்குச் சொந்தமான இடத்தில் கீரைகளை இயற்கைமுறையில் விவசாயத்தை செய்து வருகிறார். காய்கறிகள், மலர் சாகுபடியைத் தொடர்ந்து தற்போது கீரைகள் பயிரிட்டு வாரச்சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் தர்மனை அவரது விவசாயத் தோட்டத்திற்கே சென்று சந்தித்தோம். எங்கள் வருகையை ஏற்கனவே தெரிந்துவைத்திருந்த தர்மன் நாங்கள் வந்ததும் புன்னகையோடு வரவேற்று அவரது கீரைத் தோட்டத்தை சுற்றிக் காண்பித்தார். பலபல நிறங்களில் வேறுவேறு வகையான கீரைகள் அதிகம் இருந்தன. உங்கள் விவசாய முறையைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றதும் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
நாங்கள் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அப்பா காலத்தில் விவசாயம் செய்யும்போது நெல், கரும்பு என விவசாயம் செய்தோம். சிறு வயதில் அப்பாவோடு விவசாய வேலைகளை செய்துவந்த நான் பண்ணிரண்டாம் வகுப்பிற்கு பிறகு படிக்கவில்லை. அதன்பிறகு விவசாயம்தான் முழுநேரத் தொழிலாக மாறியது. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக விவசாயம்தான் செய்து வருகிறேன். எனக்குச் சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில்தான் விவசாயம் செய்கிறேன். ஆரம்பத்தில் நெல் பயிரிட்ட நான் அதன்பிறகு வேறு விவசாயம் செய்யலாம் என எனது விவசாய முறையை மாற்றிக் கொண்டேன். நெல்லிற்கு பிறகு நான்கு வருடம் பட்டுப்புழு வளர்த்தேன். அந்த தொழில் நன்றாக இருந்தது. ஆனால், ஒரே மாதிரியான வருமானம்தான் கிடைத்தது. அதனால் பட்டுப்புழு வளர்ப்பிற்கு பதிலாக வேறு விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்து சாமந்தி சாகுபடி செய்தேன். 5 வருடம் தொடர்ந்து சாமந்தி தான் விவசாயம். சாமந்தி மலருக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதனால் வருமானமுமே நல்ல முறையில் இருந்தது. அந்த சமயத்தில்தான் இயற்கை முறை விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள கோவை பல்லடம் அருகே 8 நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்குதான் கலப்பின மருந்துக்களால் மண் எப்படி விஷமாக மாறுகிறது. சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் எந்தளவு நோயை ஏற்படுத்தும். மண் எப்படி மலட்டுதன்மையாக மாறுகிறது, தொடர்ந்து பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் மகசூல் குறைந்து நோய் தாக்கம் எப்படி பரவுகிறது என அனைத்தையும் தெரிந்து கொண்டேன்
அதன்பிறகு எனது நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துபார்க்கலாம் என முடிவெடுத்து ஒரு 10 சென்ட் நிலத்தில் தக்காளி பயிரிட்டு அதை முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்தேன். அதாவது, தக்காளிக்குத் தேவையான அடி உரம் முதல் அதற்கு தேவையான கரைசல் என அனைத்துமே இயற்கை முறையில்தான் கொடுத்தேன். அப்படி கொடுத்ததால் இயற்கை விவசாயம் செய்த அந்த 10 சென்டில் இருந்து மட்டும் அதிக மகசூல் கிடைத்தது. தக்காளியின் சுவையுமே நன்றாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். எனது தோட்டத்தில் அரை ஏக்கரில் மஞ்சள், அரை ஏக்கரில் சாமந்தி, மீதமுள்ள இடத்தில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிட்டிருக்கிறேன். கீரையைப் பொறுத்தவரை 10 வகையான கீரைகள் இருக்கின்றன. நாட்டு மல்லி இலை, பாலக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, புதினா, பொன்னாங்கண்ணி போன்ற 10 வகையான கீரைகள் பயிரிட்டிருக்கிறேன். கீரைகளைப் பொருத்தவரையில் ஒருமுறை விதைப்பு ஒருமுறை அறுவடை அவ்வளவுதான்.
அதாவது எனது நிலத்தில் கீரைகளை சுழற்சி முறையில் பயிரிடுகிறேன். கீரைகள் விதைத்து 25வது நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும் என்பதால் மாதம் முழுவதும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நான் கீரைகளை வேறுவேறு இடத்தில் விதைக்கத் தொடங்குவேன். அதாவது 15 அடி அகலத்தில் 50 அடி நீளத்தில் பார் அமைத்து அந்த பாரை 10 ஆக பிரித்து பத்து வகையான கீரைகள் விதைக்கிறேன். இதே அளவில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் தனித்தனியாக கீரைகள் விதைப்பதால் முதல் வாரம் விதைத்த இடத்தில் இருந்து 25வது நாளில் அறுவடை செய்வேன். 2வது திங்கள் கிழமை விதைத்த இடத்தில் அடுத்த 25வது நாளில் அறுவடை செய்வேன். இப்படி நான்கு முறை விதைப்பு நான்கு முறை அறுவடை என சுழற்சி முறையில் கீரை சாகுபடி செய்து வருகிறேன். கீரை பயிரிடுவதற்கு முன்பு நிலத்தை உழுது கீரை விதைகளை தூவி அதன் மீது காய்ந்த தொழு உரத்தை தூவி முன்னும் பின்னுமாக மண்ணை கலந்து விடுவேன். விதைகள் விதைத்து அடுத்த நாளில் முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3 முதல் 5வது நாட்களில் விதைகள் மண்ணை விட்டு வெளியே முளைக்கத் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து 25வது நாளில் அறுவடைதான். அமிர்த கரைசல், பழக்கரைசல், ஜீவாமிர்தம் என இயற்கை முறை கரைசல்கள்தான் கீரைகளுக்கு உரமே. அதுவே வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாகவும் இருக்கிறது. இவ்வாறு அறுவடை செய்கிற கீரையை வாரத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் பகுதியில் இருக்கும் சந்தையில் நானே நேரடியாக சென்று விற்பனை செய்வதால் லாபகரமான விவசாயத்தை என்னால் செய்ய முடிகிறது என்கிறார் தர்மன்.
தொடர்புக்கு:
தர்மன் – 63804 05749.
கீரையைப் போலவே அவரது நிலத்தில் தக்காளி, வெண்டை, கத்தரி என நாட்டுக் காய்களை பயிரிட்டிருக்கிறார் தர்மன். கத்தரியில் மட்டும் 10 வகையான ரகங்கள் இருக்கிறது. அதேபோல், தக்காளிக்கு ஊடு பயிராக வெண்டையும் அவரையும் பயிரிடுவதால் ஒரே அறுவடையில் 3 வகையான காய்கறிகள் கிடைக்கிறது என்கிறார். காய்கறியிலும் வாரம் ரூ.5000 வருமானம் வருகிறது என்பதால் மாதம் கீரை மற்றும் காய்கறிகளில் இருந்து ரூ.40000 வருமானம் கிடைக்கிறது என்கிறார்.
எங்கள் ஊரில் தளிர்கள் அமைப்பின் மூலம் ‘தமிழர் மரபு சந்தை’ எனும் சந்தை இயங்கி வருகிறது. அந்தச் சந்தையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பொருட்கள் மட்டும்தான் விற்க அனுமதி இருக்கிறது. நான் உட்பட எங்கள் பகுதியில் இருக்கிற மரபு சார்ந்த இயற்கை விவசாயிகள் 50பேர் அந்தச் சந்தை மூலம் பயனடைகிறோம். மக்களும் எளிதில் இயற்கை முறை விளைந்த உணவுப் பொருட்களை வாங்கிச் செல்ல தோதாக இருக்கிறது இந்த சந்தை.
வாரம் இரண்டு நாட்கள் நடைபெறும் சந்தையில் எனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அங்குதான் விற்பனை செய்கிறேன். சராசரியாக ஒரு வாரத்திற்கு அதாவது 25வது நாள் அறுவடையில் 250 கீரைக் கட்டுகள் வரை விற்பனை செய்கிறேன் எனச் சொல்லும் தர்மன் கீரையில் இருந்து மட்டும் வாரம் ரூ.5000 வருமானம் வருகிறது என்கிறார்.