நன்றி குங்குமம் டாக்டர்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் குறைபாட்டை போக்கி நலமோடு வாழ உதவும் உணவுகளில் கீரைகள் முக்கியமானவை. கீரைகள் உடலுக்கு வலிமையும் வன்மையும் அளிக்கக் கூடியவை. கீரைகளை உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் நோய் அணுகுவது குறையும். பல நோய்களுக்கு மருந்தாகவும் கீரைகள் அமையும்.
முளைக்கீரை
இருமலை நீக்கும். பசியை உண்டு பண்ணும். வெப்பக் காய்ச்சலை தணிக்கவல்லது. சொறி, சிரங்கு முதலிய நோய்கள் குணமடையும்.
கலவைக்கீரை
வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்ற உடலினருக்கும் ஏற்றது. இதயத்தை வலுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும். எந்த வகை மருந்து உண்ணும் காலத்திலும் உண்ணலாம்.
புளிச்சக்கீரை
கெட்ட கொழுப்பை கரைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கல்லீரலை பலமாக்கும். உடல் சூட்டை தணிக்கும். பித்தம் அதிகமாகி சுவை இழப்பு ஏற்பட்டவர்களின் சுவையை மீட்டுத்தரும்.
பசலைக்கீரை
சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. ருசியின்மை, வாந்தி போக்கும். நீரடைப்பு, நீர்க்கட்டு, வெள்ளை நோய்க்கு சிறந்தது. சிறுநீர் கல்லை கரைக்கும் ஆற்றல் கொண்டது.
பொன்னாங்கண்ணி
காயகற்ப முறைப்படி உண்ண உடலுக்கு அழகை உண்டாக்கும். சருமத்தை பாதுகாக்கும். மூலநோயை கட்டுப்படுத்தும். மூளைக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். கண்பார்வைக்கு சிறந்தது.
அகத்திக்கீரை
எலும்பைப் பலப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பித்த மயக்கம் போக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். மருந்தை முறிக்கும் தன்மை கொண்டது.
சுக்கான் கீரை
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். குடல் புண்களை ஆற்றும். செரிமானத்தை சீராக்கும். சொறிசிரங்கை போக்கி மேனியை பாதுகாக்கும் மூலத்திற்கு நற்பலனை தரும்.
காசினி கீரை
சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் சிறந்தது. உடல் எடை குறைய உதவும். நீரிழிவை கட்டுப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். எந்த வகை பிணியும் விலகும்.
சிறுகீரை
சொறி, சிரங்கு, படை முதலான தோல் நோய்களை போக்கும். பித்தத்தை தணிக்கும். பித்தநோய், சிறுநீர் எரிச்சலை தீர்க்கும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் சிறந்தது.
பண்ணைக் கீரை
வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது. எலும்பை பலப்படுத்தும். மூட்டுவலி, இடுப்பு வலி, கை கால் வலி முதலான அனைத்து வலிகளையும் நீக்கும். கரப்பான், கழலை, மந்தம் போக்கும். இதன் விதையை பொடித்து உண்ண சீதபேதி, சொட்டு மூத்திரம் தீரும்.
பருப்புக் கீரை
வெயில் காலத்துக்கு ஏற்றது. உடலுக்கு குளிர்ச்சியை தரும். மலச்சிக்கலை போக்கும். கல்லீரல் நோயினருக்கு மிகவும் சிறந்தது. தாய்ப்பால் அதிகரிக்கச் செய்யும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
பிண்ணாக்குக் கீரை
வாய்வுத் தொல்லையை போக்கும். சிறுநீரகக் கோளாறை சரி செய்யும். மலக்கட்டை உடைத்து மலத்தை வெளியேற்றுவதில் சிறந்தது. அடிக்கடி சாப்பிட்டால் சொறி, சிரங்கு முதலான பிரச்னை ஏற்படும்.
முள்ளுக் கீரை
சிறுநீரைப் பெருக்கும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். தாது உற்பத்தியை அதிகரிக்கும். பாம்புக்கடி விஷத்தை முறிக்க உள்ளுக்கு வழங்கலாம். இதன் வேரை சுட்டு சாம்பலை கட்டிகளுக்கு வைத்து கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.
முருங்கைக் கீரை
இரும்புச் சத்து நிறைந்தது. உடலுக்கு வலிமை அளிக்கும். ரத்த சோகையை போக்கும். வயிற்றுப் புண் ஆறும். உடல் சூடு தணியும். வறட்டு இருமல், மார்புச்சளி, மந்தம் போகும்.
தவசிக்கீரை
ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம் குணமாகும். சளித் தொல்லை ஆகலும். தொண்டைப் புண் நீக்கும். வதக்கி அரைத்து பற்றுப்போட வீக்கம் குணமாகும். பிரசவத்துக்கு பின் ஏற்படும் கர்ப்பப்பை அழுக்கை நீக்கும்.
மணித்தக்காளிக்கீரை
புண்களை விரைவில் ஆற்றும் தன்மையுடையது. வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை குணமாக்கும். சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டை தணிக்கும். உடல் சோர்வை
போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரைக்கீரை
கணச்சூடு, மலக்கழிச்சல், ரத்தக்கிராணி போக்கும். மூளைக்கு பலம் கொடுக்கும். வெரிக்கோஸ் வெயின் எனும் நரம்புப் பாதிப்பை சரிசெய்யும். பார்வைத் திறனை அதிகரிக்கும்.
அரைக்கீரை
உடலை பலப்படுத்தும். வாத நோயை தடுக்கும். கபத்தை அறுக்கும். நரம்புகளை பலப்படுத்தும். மாதவிடாய் பிரச்னையை சீராக்கும்.
தூதுவளை கீரை
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும். இருமல், இளைப்பு, சளியை போக்கும். வாத பித்த நோய்களை கட்டுப்படுத்தும். பெருவயிறு மந்தம் சரியாகும். செரிமானத்தை சீராக்கும், கண்நோய் குணமாகும்.
தொகுப்பு : எஸ்.இராமதாஸ்