சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 304 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. சென்னையில் தரை இறங்குவதற்காக விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து, தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. அப்போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. இதனால் விமானி சற்று நிலை குலைந்தாலும், உடனே சுதாரித்து, விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கும் லேசர் ஒளி பற்றி தகவல் அளித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான பாதுகாப்பு பிரிவான பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார் கருவியினால் அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு மேற்கொண்டனர். சில வினாடிகளில் அந்த லேசர் லைட் ஒளி மறைந்து விட்டது. இதையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இதுபற்றி சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களும் தகவல் கொடுத்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்று, கடந்த மே 25ம் தேதி ஞாயிறு இரவு சென்னையில் தரையிறங்க வந்த இதே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில தினங்களில் இதேபோல் மீண்டும் 2வது முறையாக, அதே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீது பச்சை நிற லேசர் லைட் ஒளி பீய்ச்சி அடிக்கப்பட்டது, சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று விமானங்கள் மீது லேசர் லைட்கள் அடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அடிக்கடி நடந்தன. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் டிவிட்டரில், எச்சரிக்கை விடுத்ததோடு, விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர் குறித்து தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் விளக்குகள் ஒளிரவும், அதிக ஒளி தரும் விளக்குகள் ஒளிரவும், சூடான காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன்கள் மற்றும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கும் கடந்த மாதம் 28ம் ேததி முதல் வரும் ஜூலை 26ம் தேதி வரை தடை செய்யப்பட்டு அமலில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த பயணிகள் விமானத்தின் மீது யாரோ லேசர் விளக்கினை ஒளிர செய்ததால், விமான நிலைய கட்டுப்பாட்டறை மூலம் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்து.
இதுதொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. தடைகளை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.