மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் நேற்று பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் மதுராந்தகம் விவசாய பாசன ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பசுமை தாயகம் மாவட்ட தலைவர் ஓட்டகோயில் சுரேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், சாந்த மூர்த்தி, குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு விதிகளை நடை முறைப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அனைத்து கிராம புறங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதையும் தமிழக அரசு கண்டறிந்து குப்பைகளை அகற்றி நீர்நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி உரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கோபால கண்ணன், லட்சுமி ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா சுரேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


