* மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் இருந்து 149 கிராம் கஞ்சா, 4 போதை ஊசிகள் பறிமுதல்
* டீன் தேரணிராஜனின் அதிரடி சோதனையில் சிக்கினர்
* தலைமறைவான ஐ.டி.ஊழியருக்கு தனிப்படை போலீசார் வலைவீச்சு
சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டீன் தேரணிராஜன் நடத்திய அதிரடி சோதனையில், உயர் ரக கஞ்சா பயன்படுத்திய 3 பயிற்சி டாக்டர்களை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், டாக்டர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன ஊழியரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களில் சிலர் அதிகளவில் கஞ்சா பயன்படுத்தி வருவதாகவும், அதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உறுதியான தகவல் கிடைத்தது.
இதுகுறித்து சென்னை மருத்துவ கல்லூரி டீன் தேரணிராஜன் கவனத்திற்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து தனிப்படையினர் மருத்துவ கல்லூரி ஆண்கள் விடுதியில் சோதனை நடத்த அனுமதி கோரினர். ஆனால் டீன் தேரணிராஜன், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தினால் சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நாங்களே தனிக்குழு அமைத்து சோதனை நடத்தி கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து டீன் தேரணிராஜன் கஞ்சா நடமாட்டம் குறித்து விசாரணை நடத்த மூத்த டாக்டர்கள் கொண்ட தனிக்குழு அமைத்து உத்தரவிட்டார். அந்த தனிக்குழுவினர் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் கஞ்சா நடமாட்டம் குறித்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி படிக்கும் பயிற்சி டாக்டர்கள் சிலர் உயர் ரக கிரீன் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்தது. அதுதொடர்பான விசாரணை அறிக்கையை டீன் தேரணிராஜனிடம் டாக்டர்கள் குழு அறிக்கை அளித்தது.
அதன்படி டீன் தேரணிராஜன் தலைமையிலான மூத்த டாக்டர்கள் குழு நேற்று அதிகாலை சென்னை மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் விடுதி அமைந்துள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள டவர்-3 கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் அறை ஒவ்வொன்றையும் டாக்டர்கள் குழுவினர் முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது பயிற்சி டாக்டர்களான தருண், சஞ்சய் ரத்தினவேல், ஜெயந்த் ஆகியோர் தங்கியிருந்த அறையில் நடந்த சோதனையில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த 149 கிராம் கொண்ட சிறு சிறு பொட்டலங்களான உயர் ரக கிரீன் கஞ்சா, போதை மாத்திரைகள், 4 போதை ஊசிகள் இருந்தது தெரியவந்தது. உடனே டீன் தேரணிராஜன் குழுவினர் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பயிற்சி டாக்டர்கள் தங்கிய அறையில் மற்றொரு நபரும் தங்கி இருந்தார். பிறகு கஞ்சா பயன்படுத்தியது குறித்து 3 பயிற்சி டாக்டர்களிடமும் டீன் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது உயர் ரக கிரீன் கஞ்சாவை சைதாப்பேட்டை சின்னமலை அருகே வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ரோட்னி ரோட்ரிகோ என்பவர் மூலம் பெற்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து டீன் தேரணிராஜன் 3 பயிற்சி டாக்டர்களான தருண், சஞ்சய், ஜெயந்த் ஆகியோரை மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த கஞ்சா உடன் பிடித்து ஒப்படைத்தார்.
போலீசார் 3 பயிற்சி டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பயிற்சி டாக்டர்கள் அளித்த தகவலின் படி கோட்டூர்புரம் போலீசார் உதவியுடன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோட்னி ரோட்ரிகோ(26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் மதிப்புள்ள உயர் ரக கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு கஞ்சா குறித்து ரோட்னி ரோட்ரிகோவிடம் நடத்திய விசாரணையில் போரூர் அருகே உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் துஷேன் என்பவர் மூலம் பெற்றது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த துஷேன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா பயன்படுத்தியது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சென்னை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் எம்டி படித்து வரும் மாணவர்களுக்கு உயர் ரக கிரீன் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. ஆண்கள் விடுதியில் தங்கி உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கைதான 3 பயிற்சி மாணவர்கள் மூலம் தான் கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் தொடர்பான விபரங்களை தனிப்படையினர் டீன் தேரணிராஜன் மூலம் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.