மஞ்சூர் : குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதுாள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது.
இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 4மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலவியது. இதனால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் பரவலாக நல்ல மழை பெய்தது. இடை,இடையே நல்ல வெயிலும் காணப்பட்டது.
தேயிலை விவசாயத்திற்கேற்ற சீதோஷ்ண நிலை கடந்த சில தினங்களாக நிலவி வருவதால் தேயிலை மகசூல் படி,படியாக அதிகரித்து வருகிறது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் தினசரி 20டன் முதல் 25 டன் கிலோவிற்கும் மேல் பசுந்தேயிலை வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் அனைத்து பசுமையாக காட்சியளிக்கிறது.
பசுந்தேயிலை வரத்து காரணமாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை மகசூல் அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.