*சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிக்க கூடாது என சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட இளம் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில், 2 ஆயிரம் வாகனம் மட்டுமே டிஎன்43 பதிவில் உள்ளது.
பெரும்பாலான வாகனங்கள் மற்ற மாவட்ட பதிவு எண் கொண்டவை. இந்நிலையில், மேட்டுப்பாளையம், நாடுகாணி, மசினகுடி சோதனை சாவடிகளில் தானியங்கி மூலம் பசுமை வரி வசூலிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், டிஎன்43 வாகனங்கள் அல்லாத நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மற்ற மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.30 பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, ஆர்டிஓ., அலுவலகம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு உள்ளூர் வாகனங்களுக்கான பாஸ் வழங்க வேண்டும். அதேபோல், கேரளா மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தற்காலிக பெர்மிட் இன்றி ஊட்டிக்கு வருகின்றன.
இதனை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்திற்கு தனியாக வட்டார போக்குவரத்து அலுவலரை நியமிக்க வேண்டும். மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தற்போது ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் வந்துச் செல்கிறார்.
இதனால், இங்கு பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. எனவே, நீலகிரிக்கு என்று தனியாக வட்டார போக்குவரத்து அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.