புதுடெல்லி: அதிகார பேராசையில் வெறுப்பை பரப்புவதே மத அடிப்படையிலான வன்முறைகளுக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில், “21ம் நூற்றாண்டு இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது. அரியானாவில் நடந்த வன்முறை, ஆர்பிஎப் வீரரின் செயல் இரண்டும் பாரத மாதாவின் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் செயல். இது நம் நாகரிகத்தின் அடித்தளத்துக்கும், அனைத்து மதங்களின் சமத்துவத்துக்கும் எதிரானது.
அதிகார பேராசையில் சமூகத்தில் வெறுப்பை பரப்புவதன் விளைவே சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம். பொதுமக்களிடம் விரோதத்தின் விஷத்தை கலந்து ஒருவரையொருவர் சண்டையிட வைப்பது நமது அரசியலமைப்பை கேலி செய்வது போன்றது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இந்த பிரிவினை சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் அதன் பாதிப்புகளை வருங்கால இளைய தலைமுறை சந்திக்க வேண்டி இருக்கும். வெறுப்பை விடுத்து இந்தியாவை ஒருங்கிணையுங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.