பாரிஸ்: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி காலிறுதியில் கிரேட் பிரிட்டன் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அசத்திய இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.ஒலிம்பிக் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை 52 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி, நேற்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே அரையிறுதியில் கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது. முதல் கால் மணி நேர ஆட்டத்தில் கோல் ஏதும் விழாததால் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன. 2வது குவார்ட்டரில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபாரமாக கோல் அடித்து (22வது நிமிடம்) இந்தியாவுக்கு 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக இந்திய வீரர் அமித் ரோகிதாசின் மட்டை எதிரணி வீரரின் முகத்தை தாக்கியதால், அபாயகரமான ஆட்டத்துக்காக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. இதைப் பயன்படுத்தி, இங்கிலாந்து வீரர்கள் இந்திய கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்திய கோல் கீப்பர் பி.ஆர்.ஜேஷ் அபாரமாக செயல்பட்டு அவற்றை முறியடித்தார்.
எனினும், இந்திய பாதுகாப்பு அரணை ஊடுருவி பந்தை துடிப்புடன் கடத்திச் சென்ற லீ மார்டன் 27வது நிமிடத்தில் சிறப்பான ஃபீல்டு கோலாக மாற்ற 1-1 என சமநிலை ஏற்பட்டது. மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. 3வது மற்றும் கடைசி கால் மணி நேர ஆட்டத்தின் முடிவிலும் இதே நிலை தொடர்ந்ததால், விறுவிறுப்பான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் கீப்பர் ஸ்ரீஜேஷ் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கிரேட் பிரிட்டனின் 2 முயற்சிகளை தடுத்து அசத்த… இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்ரீஜேஷ் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10 வீரர்களுடன் போராடி வென்ற இந்திய அணி வீரர்கள், ஸ்ரீஜேஷை தூக்கிக் கொண்டாடி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1972க்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.
ஒலிம்பிக் தங்கம் வென்று ஜோகோவிச் சாதனை;
ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் நேற்று மோதிய செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என நேர் செட்களில் 2 மணி, 50 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச் தனது கடைசி முயற்சியில் ஒலிம்பிக் தங்கத்தையும் வசப்படுத்தி மகத்தான சாதனை படைத்துள்ளார்.
நடுவர்களின் பாரபட்சம் நிஷாந்த் ஏமாற்றம்;
ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை 71 கிலோ எடை பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் (23 வயது), அல்வாரெஸ் மார்கோ (மெக்சிகோ) நேற்று மோதினர். இந்த போட்டியில் நிஷாந்த் சிறப்பாக செயல்பட்டாலும், நடுவர்களின் பாரபட்சமான முடிவால் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவினார். புள்ளிகள் வழங்குவதில் நடுவர்கள் மார்கோவுக்கு சாதகமாக செயல்பட்டதால் பதக்க வாய்ப்பு கை நழுவியதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்த நிஷாந்த் மிகுந்த ஏமாற்றத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த முடிவை தொடர்ந்து, நடுவர்களை சரமாரியாக விமர்சித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிந்து வருகின்றனர். நட்சத்திர வீரர் விஜேந்தர் சிங்கும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அரையிறுதியில் போராடி தோற்றார் லக்ஷயா சென்;
ஒலிம்பிக் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் டென்மார்க்கின் நடப்பு சாம்பியன் விக்டர் ஆக்செல்சனுடன் நேற்று மோதினார் இந்திய நம்பிக்கை நட்சத்திரம் லக்ஷயா சென். தொடக்கத்தில் அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்து முன்னேறிய லக்ஷயா பின்னர் ஆக்சல்சனின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். லக்ஷயா 15-9, 17-11 என கிடைத்த முன்னிலையை வீணடிக்க… மிகவும் விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆக்சல்சன் 1-0 என முன்னிலை பெற்றார்.
2வது செட்டிலும் தொடக்கத்தில் அதிரடி காட்டிய லக்ஷயா தொடர்ச்சியாக புள்ளிகளை வசப்படுத்தி 7-0 என முன்னிலை பெற்றதால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனாலும், ஆக்சல்சன் கொஞ்சமும் பதற்றமடையாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்ஷயாவின் சவாலை முறியடித்தார். அவர் 22-20, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி, தொடர்ந்து 2வது முறையாக ஒலிம்பிக் பைனலுக்கு முன்னேறினார். தங்கம், வெள்ளி வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்த லக்ஷயா சென், வெண்கலப் பதக்கத்துக்காக இன்று மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதுகிறார். ஏற்கனவே 5 முறை லீ ஜியாவுடன் மோதியுள்ள சென் அவற்றில் 4-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரிலும் லீயை வீழ்த்தியுள்ளதால், சென் வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
காயத்தால் விலகினார் கரோலினா மரின்;
ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், சீனாவின் ஹி பிங் ஜியாவோ உடன் மோதினார். அதிரடியாக விளையாடி முதல் செட்டை 21-14 என கைப்பற்றிய மரின், 2வது செட்டிலும் 10-6 என முன்னிலை வகித்தபோது. துரதிர்ஷ்டவ்சமாக வலது முழங்காலில் காயம் அடைந்தார். இதனால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், கண்ணீர் மல்க களத்தில் இருந்து வெளியேறினார் மரின் (31 வயது). இவர் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த ஹி பிங் ஜியாவோ மரினை கட்டியணைத்து ஆறுதல் கூற… அரங்கில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
லவ்லினா தோல்வி;
மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடை பிரிவு காலிறுதியில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் லவ்லினா போர்கோஹைன் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீராங்கனை லி கியானிடம் போராடி தோற்றார். இந்த தோல்வியால், 2வது ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் லவ்லினாவின் கனவு கலைந்தது. இத்துடன் பாக்சிங்கில் இந்திய அணியின் போராட்டமும் முடிவுக்கு வந்தது.