திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம், பிரதம மந்திரி திவ்யாஷா முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சினிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வடிவேல், நிப்மெட் பாலபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் அமேசான், முருகப்பா குழுமம், ரிலையன்ஸ் ரீடெயல், பிரைட் பியட்சர், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன்,டாக்டர் ரெட்டி பவுண்டேஷன்,யூத் பார் ஜாப்ஸ், ரெபெல் பட்ஸ், இன்சா, பென்னார் இண்டஸ்ட்ரீஸ், ஸ்பார்க் மின்டா நிறுவனம், ஜிஞ்சர் நிறுவனம், 5 கே. கார் கேர் நிறுவனம், ஓர்த் அறக்கட்டளை, சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் மையம் போன்ற 16 வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.
99 ஆண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும், 69 பெண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் 20 ஆண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் மற்றும் 31 பெண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.